திருநெல்வேலி மாநகராட்சியில் மாடுகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடுகளை அவிழ்த்து விட்ட பா.ஜ.க மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அடைத்து வைத்தனர். இந்த மாடுகளை மாநகராட்சி சார்பில் நேற்று ஏலம் விட்டனர். சுமார் 10 மாடுகள் ரூ1.40 லட்சத்திற்கு ஏலம் விட்டப்பட்டது. இதற்கு மாட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டமும் நடத்தினர்.
இதையும் படியுங்கள்: எஸ்.ஐ கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு; காவலர் பணியிடை நீக்கம்
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க தலைவர் தயாசங்கர் தலைமையிலான பா.ஜ.க.,வினர் மாநகராட்சி ஊழியர் பிடித்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்டனர். இதையடுத்து அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகார் அடிப்படையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பா.ஜ.க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது காவல்துறை அவரை கைது செய்துள்ளது. பா.ஜ.க தலைவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதானவர்களை டிசம்பர் 2 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கைதானவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil