பாரத் பந்த் : இந்தியாவில் தொடந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டித்து வருகின்ற 10ம் தேதி தேசிய அளவிலான கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய் 38 காசுகளுக்கும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.100 என்ற வரலாற்று உச்சத்தினை அடைந்துவிடும் என்ற நிலை நிலவி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போதும் மத்திய அரசு கலால் விதியை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் செப். 10 நாடு தழுவிய பந்த்
பாரத் பந்த் தமிழக கட்சிகளின் ஆதரவு :
இந்நிலையில் நாடு தழுவிய பந்திற்கு அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தது காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் திமுக கட்சி இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தில் திமுக கலந்து கொள்ளும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
மதிமுக கட்சித் தலைவர் வைகோ, இந்த பந்திற்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
பாரத் பந்த் தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோருடன் கூட்டம் நடைபெறும் என்றும்,
12 மணியில் இருந்து 1.30 மணி வரை மாவட்டங்கள் வாரியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞரணி தலைவர்களுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது என்று அந்நிகழ்ச்சியின் நிரலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார் திருநாவுக்கரசர்.