2023-24-ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் தாக்கல் செய்யப்படும் 3-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், மத்திய அரசை காட்டிலும் தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக மத்திய அரசை காட்டிலும் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற போது ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை தற்போது ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியிலும் நிலையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைத்துள்ளோம். பல நலத்திட்டங்களை செயல்படுத்தியபோதும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் படிப்படியாக குறைக்கப்படும்'என நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு
"வருவாய் பற்றாக்குறை மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2 வருட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தான். அரசு எடுத்த முயற்சியின் காரணமாக முன்னேற்றம் கண்டு வருகிறோம். நாட்டுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. சமூக நீதி, அனைவருக்கும் வளர்ச்சி என 4 அம்சங்கள் அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது" எனப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”