By: WebDesk
Updated: October 22, 2020, 10:05:40 AM
திருநங்கை சங்கீதா
திருநங்கை ஆக்டிவிஸ்ட் சங்கீதா (60) புதன்கிழமை கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். சங்கீதாவின் சிதைந்த உடல் ஒரு துணியில் போர்த்தப்பட்டு, ஒரு பிளாஸ்டிக் டிரம் உள்ளே வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சாய்பாபா காலனியி, என்.எஸ்.ஆர் சாலையில் வசித்து வந்த சங்கீதா, கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதோடு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பல தொண்டு நிகழ்வுகளைத் தொடங்கினார். அதோடு 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டரிங் தொழிலில் இருந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, சங்கீதா, திருநங்கைகளால் முழுமையாக இயக்கப்படும், ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை திறந்தார். செப்டம்பர் மாதம் indianexpress.com க்கு அளித்த பேட்டியில், தொற்றுநோயால் வேலை இழந்த தனது சமூக உறுப்பினர்களுக்கு உதவ விரும்புவதாக கூறினார். மேலும் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக, இரண்டாவது பிரிவை விரைவில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
உள்ளூர் தகவல்களின்படி, கடந்த சில நாட்களாக சங்கீதா தனது உணவகத்தில் காணப்படவில்லை என்றும் அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. திருநங்கை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை காலை அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அவரது இல்லத்தில் இருந்து வந்த துர்நாற்றத்தால், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
திருநங்கைகளுக்கான உரிமை ஆர்வலர் கிரேஸ் பானு இந்த சம்பவத்தை கண்டித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தினார். Indianexpress.com உடன் பேசிய அவர், “இது திருநங்கை உறுப்பினர்களை மெளனமாக்கும் முயற்சி. அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். எங்களுக்காக பேச யாரும் இல்லை. இந்த சமூகத்திற்கு எதிராக குற்றம் செய்யும் நபர்கள் மீது, சட்டமியற்றுபவர்கள் கடுமையாக செயல்படவில்லை. கடந்த ஆண்டு, தூத்துக்குடியில் கோயில் பூசாரியாக பணிபுரிந்த ராஜாத்தி சில குண்டர்களால் தலை துண்டிக்கப்பட்டார். அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வகையான குற்றங்கள் தொடரும். நேற்று அது ராஜாத்தி, இன்று அது சங்கீதா, நாளை அது கிரேஸ் பானுவாக இருக்கலாம்” என்றார்.
சாய் பாபா காலனி போலீசார், இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகக் கூறினர். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”