முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த திருச்சி ஆலங்குடி மகாஜனம் பகுதி மக்கள்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கூழையாறு மற்றும் புள்ளம்பாடி அருகே உள்ள நந்தியாற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி வந்திருந்தார்.
Advertisment
ஆய்வுப் பணியினை மேற்கொண்டிருந்தபோது வழியில் ஆலங்குடி மகாஜனம் அருகே காரை நிறுத்திய முதலமைச்சர் அப்பகுதியில் நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, பேருந்து வசதி செய்து தருமாறு பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் அதிரடி உத்தரவின் பேரில் காலை 8:00 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து லால்குடிக்கும் என 4 நடைகள் பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்தார்.
பேருந்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தாய்மார்கள்
அதன்படி இன்று (10.06.2023) காலை ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து செம்பரை, காட்டூர் வழித்தடத்தில் லால்குடிக்கு 88P என்ற நகரப் பேருந்து இயக்கப்பட்டது. அப்பகுதி பெண்கள் மற்றும் அனைவரும் பேருந்துக்குள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதேபோல், திருச்சி விமான நிலையம் வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் உதவி கோரிய சிறுமியின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமியின் தாயாரிடம் மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
முதல்வரிடம் படிப்புச் செலவுக்கான கோரிக்கை வைத்த மாணவி தனது தாயாருடன்
முதல்வரிடம் மனு கொடுத்தது குறித்து மாணவியின் தாயார் தெரிவிக்கையில்; கோயம்புத்தூரில் வசித்து வரும் எனது கணவர் லித்தோஸ் வேலை செய்து வந்தார். கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து எங்களது குடும்ப வருமானத்திற்காகவும், குழந்தையின் படிப்பு செலவுக்காகவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். நாங்கள் வசிக்கவும், படிப்பு செலவுக்கும் உதவிடுமாறு கோரிக்கை விடுத்தோம். மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார், என்று கூறினார்.
அதன்படி அந்த சிறுமியின் தாயார் கொடுத்த மனுவின்படி உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர், இவர்களுக்கு என்று திருச்சியில் எவ்வித தனிப்பட்ட சொத்துக்கள் இல்லாததால் இவர்களின் வருமானத்தின் அடிப்படையில் கோயம்புத்தூரில் வீடு வழங்குவதற்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளின் கல்வி செலவுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிதி குழுவில் இருந்து அளிக்கப்படும் என்று மனுவை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார் ஆட்சியர் பிரதீப் குமார்.
தமிழக முதல்வர் திருச்சி-தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆய்வுப் பணியின்போது கோரிக்கை விடுத்த பொதுமக்களுக்கு உடனடி தீர்வு கிடைத்ததில் அப்பகுதியினர் மகிழ்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil