திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை இன்று வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் இன்று (08.02.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ இரண்டாம் கட்டத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: காரில் இருந்த வினோத பாம்பு : லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு
இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் கணக்கெடுப்பு பணி என்பது அரசியல், திருச்சியில் இதுவரையிலும் கணக்கெடுப்பு பணி இல்லை. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் 4 முறை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிச்சயமாக ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும். திருச்சி காவிரி பாலம் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் 15 நாட்களில் திறக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்கள் 81 ஏக்கர் இதுவரையிலும் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு பணி முழுமையாக நிறைவுபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை ஏக்கர், 1ஏக்கர் என கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மூன்று தினங்களில் முழுமையாக கணக்கெடுப்பு பணி முடிவடையும் என்றார்.
திருச்சி மாநகர ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் திருச்சி காவேரிப் பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கும் காலம் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக, திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil