சட்டப்பேரவையில், இன்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.
அதேபோல் நாளை பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும் இன்றே சென்னையில் குவியத் தொடங்கிவிட்டனர்.
இதையும் படியுங்கள்: காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? சட்டசபையில் துரைமுருகன் விளக்கம்
திருச்சி மாவட்ட தி.மு.க.,வினர் மொத்தமாக சென்னைக்கு ரயில் ஏறியதால் ராக்ஃபோர்ட், மங்களூரு, பல்லவன் உள்ளிட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரின் 8-வது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம் அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை தனது துறை சார்ந்து வெளியிடவுள்ளதால் அவரது உரையை காணவும், வாழ்த்துச் சொல்லவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.
அதேபோல் அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்துக்கும் தற்போது பொறுப்பு அமைச்சர் என்பதால் சேலத்திலிருந்தும் ஒரு பெரும் படை சென்னைக்கு வந்திருக்கிறது. இதனிடையே அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை இல்லத்தில் காலை, மதியம் என கட்சிக்காரர்களுக்கு தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மானியக் கோரிக்கையின் போது தன்னை சந்தித்து வாழ்த்துச் சொல்ல வருபவர்களுக்கு கே.என்.நேரு விருந்து வைப்பது வழக்கமான ஒன்று தான்.
திருச்சி மாவட்டத்திலிருந்து அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுத்து வந்ததை போல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். காரணம் நாளை பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதே ஆகும். இந்தாண்டு ஏராளமான புதுமையான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தவிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களின் மானிய கோரிக்கைகள் இன்றும், நாளையும் நடைபெறுவதால் மலைக்கோட்டையில் இருந்து சென்னை கோட்டைக்கு தி.மு.க கரை வேட்டிகள் குவிந்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.