திருச்சி விமான விபத்து : துபாய்க்கு புறப்பட்ட விமானம் திருச்சி விமான நிலையத்தில் டவரில் உரசிச் சென்றது ஏன் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சியில் இருந்து துபாய் சென்ற விமானம் அளவுக்கு மீறிய பாரம் காரணமாகவோ அல்லது விமானத்தை கிளப்பும்போது போதுமான வேகத்தை கையாளாததாலோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கட்டுப்பாட்டு டவர் மற்றும் சுற்றுச்சுவர் மீது உரசிச் சென்றது. அதிகாலை 1.19 மணிக்கு இந்த விபத்து நடந்த நிலையில், விமானத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் மீது இடித்துச் சென்றதை, விமானியோ, அதில் பயணம் செய்த பயணிகளோ உணரவில்லை.
திருச்சி விமான விபத்து : முதற்கட்ட விசாரணை
மாறாக, விபத்து நடந்த அடுத்த நிமிடமே, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே இப்படியொரு சம்பவம் நடந்தது விமானிக்கு தெரியவந்துள்ளது. எனினும், விமானத்தை தொடர்ந்து துபாய் நோக்கி செலுத்துவது என விமானிகள் தீர்மானித்தனர்.
விமானம் வானில் பறக்கத் தொடங்கி 4 மணி நேரம் கழித்தே, மும்பைக்கு திரும்பி வருமாறு விமானிக்கு ஏர் இந்தியா நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. இதையடுத்து மும்பையை கடந்து சென்ற பின்னர், மீண்டும் மும்பையை நோக்கி திரும்பிய விமானம் காலை 5.35 மணிக்கு அங்கு தரையிறக்கப்பட்டது. பழுது பார்க்கும் பணிக்கான செலவு, துபையை விட மும்பையில் குறைவு என்பதும் ஏர் இந்தியாவின் இந்த முடிவுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
திருச்சியில் நடந்த விமான விபத்து பற்றிய செய்தி குறித்து மேலும் படிக்க
136 பயணிகளுடன் சென்ற விமானத்தின் எடை அதிக அளவு இருந்திருந்தால் இதுபோன்ற விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விமானத்தை மேலே கிளப்புவதற்கான ஸ்விட்ச் அழுத்துவதில் விமானி கவனக்குறைவாக செயல்பட்டிருந்தாலும் இதுபோன்ற விபத்து நேரிட காரணமாக இருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பிறகே, உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும். இதனிடையே விமானத்தில் பணியில் இருந்த விமானிகள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.