Advertisment

நெஞ்சை பிழிந்த சோகம்: அதிகாலையில் சடலமாக சுஜித் மீட்பு

ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெஞ்சை பிழிந்த சோகம்: அதிகாலையில் சடலமாக சுஜித் மீட்பு

Trichy Nadukattupatti Sujith Wilson Rescue operation live updates : 80 மணி நேர மீட்புப் பணிகள் தோல்வியில் முடிவடைந்தன. ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுஜித்தினை இன்று  அதிகாலையில் சடலமாக மீட்டனர் மீட்புக் குழுவினர்.

Advertisment

தீபாவளியை இந்தியாவே கொண்டாட, தமிழர்களின் எண்ணமும் நினைவும் முழுக்க முழுக்க சுர்ஜித்தின் உடல்நிலை குறித்து தான் இருந்தது. 25ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார். 25 அடி ஆழத்தில் இருக்கும் போது அவனை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. தற்போது 88 அடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அந்த ஒற்றை உயிரை காப்பாற்ற அனைவரும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

சிறுவனை மீட்கும் பணி துவங்கிய நேரத்தில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி, மணப்பாறை அருகே அமைந்திருக்கும் நடுக்காட்டுப்பட்டி என்ற அந்த கிராமத்தில் தான் இருக்கிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன் உடன் இருக்கிறார். 27ம் தேதி நள்ளிரவுக்கு மேல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நடுக்காட்டுப்பட்டி சென்று சுர்ஜித்தின்  பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் படிக்க : நேரில் சென்று மேற்பார்வையிட்ட துணை முதல்வர்… சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல்

அவன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்திருமாவளன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Live Blog

சுர்ஜித்தின் மீட்புப் பணி தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    22:31 (IST)28 Oct 2019

    குந்தை சுஜித் மேலும் ஆழத்திற்கு செல்லாமல் இருக்க ஏர் கிளிப் மூலம் கைகள் கட்டப்பட்டது

    ஆழ்துளைக் கிணற்றில் குழந்த சுஜித் 88 அடி ஆழத்தில் உள்ளான். குழந்தை மேலும் ஆழத்திற்கு செல்லாமல் இருக்க சுஜித்தின் கைகள் ஏர் கிளிப் மூலம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    22:26 (IST)28 Oct 2019

    சுஜித்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்: நடுக்காட்டுப்பட்டியில் கடுமையான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    குழந்தை சுஜித்தை மீட்பதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

    21:55 (IST)28 Oct 2019

    சோதனை முறையில் குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் மேலே ஏறி வந்தார்

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி மூலம் தீயணைப்பு வீரர் ஒருவர் சோதனை அடிப்படையில் இறங்கினார். பின்குழிக்குள் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தபின் அவர் மீண்டும் மேலே ஏறி வந்தார்.

    21:52 (IST)28 Oct 2019

    இன்று இரவுக்குள் குழந்தை சுஜித் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது - திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி

    நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணிகளை பார்வையிட்ட திமுக எம்.பி. திருச்சி சிவா, இன்று இரவுக்குள் குழந்தை சுஜித் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    21:48 (IST)28 Oct 2019

    சுஜித் மீட்பு- ஆக்ஸிஜன் சிலிண்டருடன் குழிக்குள் இறங்கிய வீரர்

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி மூலம் வீரர் ஒருவர் இறங்கியுள்ளார். குழிக்குள் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தபின் தொடர்ந்து குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    20:43 (IST)28 Oct 2019

    55 அடி ஆழத்துக்கு கீழே மண் தன்மையுள்ள பாறைகளாக இருப்பதால் மீட்பு பணி வேகமடையும்

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி 55 அடி ஆழத்தை கடந்துள்ளது. இதற்குப் பிறகு மண் தன்மையுள்ள பாறைகளாக இருப்பதால் துளையிடும் பணி வேகமடையும் என்று கூறப்படுகிறது.

    20:00 (IST)28 Oct 2019

    குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது - வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்

    நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகளை கண்காணித்துவரும் வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்: குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது. மீட்பு பணியில் பாறைகள் கடும் சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    19:49 (IST)28 Oct 2019

    சுஜித்தை மீட்க நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் பஞ்சாப் விவசாயிகள் ஹர்விந்தர் சிங், குர்விந்தர் சிங்

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்பதற்காக மஜக பஞ்சாப்பிலிருந்து ஹர்விந்தர் சிங், குர்விந்தர் சிங் ஆகிய இரண்டு விவசாயிகளை நடுகாட்டுப்பட்டிக்கு வர ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் இருவரும் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பஞ்சாப்பில் ஏற்கெனவே இதுபோல ஆழ்துளைக் கிணற்றில் விழுழ்ந்த குழந்தையை மீட்டுள்ளார்கள்.

    19:39 (IST)28 Oct 2019

    குழந்தை சுஜித்தை மீட்க தற்போது 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் இதுவரை 63 அடி ஆழம் குழி தோண்டப்பட்டுள்ளது.

    19:29 (IST)28 Oct 2019

    சுஜித் மீட்பு பணிகள் காரணமாக நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு தள்ளிவைப்பு

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நாராயணன், முத்தமிழ்ச்செல்வன் இருவரும் 29 ஆம் தேதி பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், குழந்தை சுஜித் மீட்பு பணியில் நடைபெறுவதால் எம்.எல்.ஏ.-க்களின் பதவியேற்பு நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    19:15 (IST)28 Oct 2019

    சுஜித் மீட்பு பணிகளை பார்க்க கூட்டம் கூடுவதால்; மீட்பு பணிக்கு இடையூறு

    குழந்தையின் மீட்பு பணியைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியதால் மீட்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் கூட்டம் அதிக அளவில் சேராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    19:13 (IST)28 Oct 2019

    சுஜித்தை மீட்க சுழற்சி முறையில் மீட்பு பணியில் ஈடுபடும் மீட்புக் குழுவினர்

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 72 மணி நேரங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் உள்பட அனைத்து மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மீட்பு பணி செய்துவருகின்றனர். அதனால், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். 

    19:05 (IST)28 Oct 2019

    மீட்பு பணி கடைசி கட்டம் வரை தொடரும்.. முயற்சியை கைவிட மாட்டோம் - வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்

    நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியை கண்காணித்துவரும் வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்: குழந்தை சுஜித்தை மீட்கும் பணி கடைசி கட்டம் வரை தொடரும். தொழில்நுட்பக் குழுவினர்கள் முயற்சியைக் கைவிடமாட்டார்கள் என்று கூறினார்.

    18:50 (IST)28 Oct 2019

    ரிக் இயந்திரம் மூலம் தற்போது 52 அடிக்கு துளையிடப்பட்டுள்ளது

    மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டுவருகிறது. குழந்தை 88 அடியில் உள்ள நிலையில், 98 அடி ஆழம் இலக்கு வைக்கப்பட்டு துளையிடப்படுகிறது. இதுவரை 52 அடி ஆழம் துளையிடப்பட்டுள்ளது.

    18:37 (IST)28 Oct 2019

    சுஜித் மீண்டுவர வேண்டும்; அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன் - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் மீண்டுவர வேண்டும் என்று அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன். குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன்.

    18:34 (IST)28 Oct 2019

    மஜக முயற்சியில் சுஜித்தை மீட்க பஞ்சாப் விவசாய தொழில்நுட்ப நிபுணர் வீரேந்திர சிங் விமானம் மூலம் வந்துகொண்டிருக்கிறார்

    மனிதநேய ஜனநாயக கட்சி முன் முயற்சியில், குழந்தை சுஜித்தை மீட்க, பஞ்சாப் விவசாய தொழில் நுட்ப நிபுணர் வீரேந்திர சிங் விமானம் மூலம் திருச்சி வந்துக் கொண்டிருக்கிறார். இரவு 11:30 க்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அவரை , திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து ஆலோசனை வழங்க மணப்பாறைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

    18:28 (IST)28 Oct 2019

    குழந்தை சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது: வைகோ

    நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று குழந்தை சுஜித்தின் மீட்பு பணிகளைப் பார்வையிட்ட வைகோ: பசி ஏற்பட்டு தாகம் ஏற்பட்டு ஒவ்வொரு நொடியிலும் மரண வேதனையிலே துடிப்பதை நினைக்கிறபோது நெஞ்சு வெடிகிறது. இந்தப் பகுதியிலே குழிகளை அமைப்பவர்கள் தண்ணீர் கிடைக்காவிட்டால், அதை மூடாமல் அப்படியே சென்றுவிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. அரசு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்துவருகிறது. அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்த்துறை செயலாளர், காவல்துறையினர் என அனைத்துதுறை அதிகாரிகளும் இங்கேயே இருக்கின்றனர். நடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இங்கேயே இருக்கிறார். அரசுக்கு இது குறித்த ஒரு திட்டவட்டமான தொழில் நுணுக்கம் அதற்குரிய கருவிகள் வேண்டும் என்று கூறினார்.

    17:59 (IST)28 Oct 2019

    உசுரோட வாமகனே - வைரமுத்து உருக்கம்

    சோளக் கொல்லையில

    சொல்லாமப் போனவனே

    மீளவழி இல்லாம

    நீளவழி போனவனே

    கருக்குழியிலிருந்து

    கண்தொறந்து வந்ததுபோல்

    எருக்குழியிலிருந்து

    எந்திரிச்சு வந்திரப்பா

    ஊர்ஒலகம் காத்திருக்கு

    உறவாட வாமகனே

    ஒரேஒரு மன்றாட்டு

    உசுரோட வாமகனே

    என்று வைரமுத்து தனது ட்விட்டரில் கவிதை எழுதியுள்ளார். 

    17:49 (IST)28 Oct 2019

    72 மணி நேரமாக மீட்புப் பணி

    சுஜித்தை மீட்கும் பணி, 72 மணி நேரத்திற்கும் அதிகமாக அதிகமாக நான்கு நாட்கள் முழுவதும் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த 25ம் தேதி மாலை 5.40 மணிக்கு சுஜித் ஆழ்துளை குழிக்குள் விழுந்தான்.

    17:41 (IST)28 Oct 2019

    தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும் - முதல்வர் பழனிசாமி

    'குழந்தை சுர்ஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் 3 அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி.- ஓ.என்.ஜி.சி மற்றும் எல்.அண்ட்.டி, என்.ஐ.டி. நிபுணர்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டுள்ளனர். அதிநவீன துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணி தொடர்கிறது. தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும்'- முதல்வர் பழனிசாமி

    17:31 (IST)28 Oct 2019

    மழை குறுக்கீடு

    மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழி மூடப்பட்டுள்ளது.

    17:23 (IST)28 Oct 2019

    பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

    பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சருடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

    17:01 (IST)28 Oct 2019

    சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது - பொன்.ராதா

    "நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும்" என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    16:46 (IST)28 Oct 2019

    நடுக்காட்டுப்பட்டி சென்ற வைகோ

    குழந்தை சுஜித்தை மீட்கும் பணியை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடுக்காட்டுப்பட்டி சென்றுள்ளார்.

    சுஜித் மீட்புப்பணி குறித்து அதிகாரிகளிடம் வைகோ கேட்டறிந்தார்.

    16:24 (IST)28 Oct 2019

    மணலை உறிஞ்சு எடுக்க திட்டம்

    சுர்ஜித் மீது விழுந்துள்ள மணலை உறிஞ்சு எடுக்க மீட்புக் குழுவினர் முடிவு எடுத்துள்ளனர். அதேசமயம், போர்வெல் மூலம் பாறைகளை துளையிடும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

    16:08 (IST)28 Oct 2019

    குவார்ட்ஸ் கிறிஸ்டலைன் பாறைகள்

    சுர்ஜித் விழுந்துள்ள குழியைச் சுற்றியுள்ள பாறைகள் Quartz Crystalline Rocks என்று அழைக்கப்படுகிறது. அதாவது அதிகளவு குவார்ட்ஸ் தனிமம் நிறைந்த பாறைகள் என்பதால் இது குவார்ட்ஸ் கிறிஸ்டலைன் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாறை தான் மீட்புப் படையினரின் உழைப்பை தற்போது உறிஞ்சு கொண்டிருக்கிறது.

    15:50 (IST)28 Oct 2019

    சுர்ஜித் மீட்பு குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி

    சுர்ஜித் மீட்புப் பணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமியிடம் விவரம் கேட்டறிந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், 

    15:32 (IST)28 Oct 2019

    வீரமணி குழுவுக்கு அழைப்பு

    புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி தலைமையிலான குழுவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி, புதுக்கோட்டையில் இருந்து வீரமணி தலைமையிலான குழு மீட்புப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

    15:03 (IST)28 Oct 2019

    திட்டம் மாற்றம் - 6 துளைகள் ஏற்படுத்த முடிவு

    போர்வெல் மூலம் 3 துளையிடும் முடிவு எடுத்த நிலையில், தற்போது 6 துளைகளை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 20 அடி ஆழத்திற்கு 4 துளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    14:56 (IST)28 Oct 2019

    குழந்தையை மீட்க பொறியாளர் சொல்லும் எளிய வழி

    குழந்தை சுர்ஜித்தை மீட்க மீட்புப் படையினர் கடுமையாக போராடி வரும் நிலையில், பொறியாளர் சொல்லும் வழி எளிய வழியை எங்கே பார்ப்போம்

    14:45 (IST)28 Oct 2019

    வேகமெடுக்கும் மீட்புப் பணி

    போர்வெல் மூலம் துளையிடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்படியாவது, இரண்டு மணி நேரத்திலாவது பாறைகளை துளையிட்டுவிட வேண்டும் என்று பணி நடந்து வருகிறது. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,  அமைச்சர்கள், அதிகாரிகள் இதனை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

    14:11 (IST)28 Oct 2019

    அட்வான்ஸ் மாடல் போர்வெல்

    இந்த போர்வெல் அட்வான்ஸ் மாடல் என்றும், இதன் செயல்பாட்டுக்கு ஒருவரே போதும் என்றும் டெக்னீஷியன்கள் தெரிவித்துள்ளனர். நட். போல்ட் போன்றவற்றை அதுவே தானாக மாற்றிக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்

    13:59 (IST)28 Oct 2019

    அதிகாரிகளின் திட்டம் என்ன?

    1200 குதிரை திறன் கொண்ட போர்வெல் மூலம், 6 இன்ச் சுற்றளவில் மூன்று குழிகள் போடப்படுகிறது. இதன் பிறகு, இரண்டாவது ரிக் இயந்திரம் கொண்டு, அந்த மூன்று துளைகளையும் ஒரே துளையாக மாற்றுவது என்பதே இப்போது செய்துகொண்டிருக்கும் பணியாகும்.

    13:39 (IST)28 Oct 2019

    Horizontal-ஆக எப்படி துளையிட முடியும்?

    புதிய போர்வெல் மூலம் செங்குத்தாக 100 அடி ஆழத்திற்கு துளையிட்டால் கூட, அதன்பிறேகு பக்கவாட்டில் Horizontal-ஆக எப்படி துளையிட முடியும்? எப்படி அதனை செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

    13:39 (IST)28 Oct 2019

    6 இன்ச் சுற்றளவு போதுமா?

    1200 குதிரை திறன் கொண்ட போர்வெல், 6 இன்ச் சுற்றளவில் தான் வரை துளையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1 மீ சுற்றளவில் துளையிட்டால் மட்டுமே ஒரு ஆள் உள்ளே செல்ல முடியும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

    13:36 (IST)28 Oct 2019

    1200 குதிரை திறன் போர்வெல்

    1200 குதிரை திறன் (Horse Power) கொண்ட போர்வெல் மூலம் பாறைகளை துளைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 1200 HP திறன் கொண்ட போர்வெல், ஒரு மணி நேரத்தில் 100 அடி ஆழம் வரை தோண்டும் திறன் கொண்டதாகும்

    13:10 (IST)28 Oct 2019

    மணப்பாறையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    மணப்பாறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆழ் துளையிடும் பணியும், சுர்ஜித் விழுந்த பள்ளத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    12:53 (IST)28 Oct 2019

    மீண்டும் களத்துக்கு வந்த துணை முதல்வர்

    நேற்று நள்ளிரவு மீட்புப் பணிகளை மேற்கொள்ளப்படும் இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்தார் துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தற்போது மீண்டும் திருச்சியில் இருக்கும் நடுக்காட்டுப்பட்டிக்கு விரைந்திருக்கிறார் துணை முதல்வர்.

    12:51 (IST)28 Oct 2019

    புதிதாக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கிய வீரர்

    ஆழ்துணை கிணறுக்கு அருகே போடப்பட்ட புதிய பள்ளத்தின் உள்ளே இறங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் தீயணைப்பு வீரர். ஏணி மூலம் கீழே இறங்கிய வீரர் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்.

    12:30 (IST)28 Oct 2019

    போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் துவக்கம்

    பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம் மிகவும் உதவும் என்பதால் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் மூலம் துளையிடும் பணி துவங்கப்பட உள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஒப்புதலோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    12:15 (IST)28 Oct 2019

    இதுவரை 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது

    இன்னும் சற்று நேரத்தில் பள்ளம் தோண்டும் பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது ரிக் இயந்திரம் இதுவரை 10 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் இயந்திரம் 35 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    12:01 (IST)28 Oct 2019

    மேலும் 9 தீயணைப்பு வீரர்கள் தேர்வு

    சுர்ஜித்தை குழிக்குள் இருந்து மீட்பதற்காக 9 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக நடைபெறும் மீட்புப் பணியில், புதியதாக 9 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கண்ணாதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகியோரை தொடர்ந்து இந்த 9 பேரும் தேர்ந்தெடுப்பு.

    11:55 (IST)28 Oct 2019

    பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம்

    நடுக்காட்டுப்பட்டியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த ரிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம்.

    10:30 (IST)28 Oct 2019

    இந்த மீட்புப் பணி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கிறது - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

    துளையிடும் பணி திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை. பாறைகள் அதிகம் நிறைந்திருப்பதால் துளையிடும் பணி மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கிறது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறோம் என்றும், வண்டல் மண் தென்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    10:21 (IST)28 Oct 2019

    அசைவின்றி கிடக்கும் குழந்தைக்கு நம்பிக்கை பேரில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது

    குழந்தை சுர்ஜித் அசைவின்றி இருக்கின்றான். இதுவரை எந்த சுவாசத்தையும் அவனிடம் இருந்து கேட்க இயலவில்லை. நம்பிக்கையின் பேரில் குழந்தைக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

    10:07 (IST)28 Oct 2019

    நடுக்காட்டுப்பட்டியில் மழை

    நடுக்காட்டுப்பட்டி மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் மழை பெய்து வருகிறது.

    09:34 (IST)28 Oct 2019

    அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு (2/2)

    கணித்தபடி இரண்டு ரிக் இயந்திரங்களைக் கொண்டு முழுமையாக பள்ளம் தோண்ட முடியவில்லை. விரைவில் மாற்றுவழி குறித்து துணை முதல்வரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். இனி இந்த இயந்திரத்தை வைத்து மேலும் தோண்ட இயலுமா என தெரியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு.

    09:32 (IST)28 Oct 2019

    அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு (1/2)

    மீட்புப் பணியில் கடினமான பாறைகளை உடைக்க ரிக் பயன்படுத்தப்படும் ட்ரிலிங்க் ப்ளேட்கள் சென்னையில் இருந்து ஒரு மணி நேரத்தில் கொண்டு வரப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    09:30 (IST)28 Oct 2019

    இயந்திரங்களே திணறும் நிலையில் கடும்பாறைகளாக இருக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

    அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். நடுக்காட்டுப்பட்டியில் பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதால் இயந்திரங்களே திணறும் நிலையில் இருக்கிறது என கூறியுள்ளார் அவர்.

    09:24 (IST)28 Oct 2019

    அரசையோ, ஆழ்துளை இயந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை - வைரமுத்து ட்வீட்

    நேற்றே சுர்ஜித்தின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் கவிஞர் வைரமுத்து. இன்று மீண்டும் அரசையோ, ஆழ்துளை இயந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

    09:21 (IST)28 Oct 2019

    நடுகாட்டுப்பட்டியில் பிரார்த்தனையில் ஈடுபட்ட நடிகர் தாமு

    நடிகர் தாமு நடுக்காட்டுப்பட்டியில், மீட்புப் பணி நடைபெறும் இடத்தில், சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்.

    09:20 (IST)28 Oct 2019

    நடுக்காட்டுபட்டிக்கு வந்த ஜி.கே.வாசன்

    நடுக்காட்டுப்பட்டியில் மீட்புப் பணி நடைபெறும் இடத்தை வந்தடைந்தார் ஜி.கே. வாசன். சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

    சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து ட்வீட் செய்தனர்.  ரஜினி காந்த் ”இந்த விவகாரத்தில் அரசை குறை சொல்ல வேண்டாம் என்றும், அனைவரும் தங்களால் இயன்ற அளவு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறினார்.

    மேலும் படிக்க : பிழியும் சோகம் ஒருபுறம்; தளராத நம்பிக்கை மறுபுறம்: சுர்ஜித் மீட்பு ஹைலைட்ஸ்

    Trichy
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment