திருச்சியில் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு; என்கவுண்டர் மிஸ்ஸிங்
குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது – திருச்சி காவல் ஆணையர்
திருச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை காவல் ஆணையர் சத்தியபிரியா பார்வையிட்டார்
திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி துரை என்ற துரைசாமி. இவரது தம்பி சோமு என்கிற சோமசுந்தரம். இவரும் ரவுடிதான். இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற மேல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர்.
Advertisment
இந்நிலையில் இவர்கள் இருவரும் திங்கட்கிழமை திருச்சி உறையூர் அருகே உள்ள குழுமாயி அம்மன் கோயிலில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸாரைக் கண்டதும் ரவுடிகள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால், ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு போலீஸார், அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
திருச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை காவல் ஆணையர் சத்தியபிரியா பார்வையிட்டார்
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆய்வாளர் உள்ளிட்டவர்களை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதையடுத்து போலீஸார் எச்சரித்தும் அவர்கள் கேட்காததால் துப்பாக்கியால் சுட்டனர். அதில் இருவருக்கும் கால் மற்றும் கைகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் ஓட முடியாமல் விழுந்த அவர்களைப் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
போலீசாரை தாக்கிய ஆயுதம்
அரிவாளால் வெட்டப்பட்டு காயம் அடைந்த ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட போலீஸாரும், துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்த ரவுடிகள் இருவரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். போலீஸாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ரவுடிகள் இருவர் உடலில் உள்ள குண்டுகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர்.
திருச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் காவல் ஆணையர் சத்தியபிரியா செய்தியாளர்களை சந்தித்தார்
திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் நேற்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்காக, கைது செய்து குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும் பொழுது போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். போலீசாரை தாக்கிய குற்றவாளிகளை போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி மூலம் எச்சரித்தும் பலனளிக்காததால் துப்பாக்கி சூடு நடத்தினர். குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது, என்றார்.
காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
முன்னதாக ரவுடிகளின் தாய் மல்லிகா (வயது 58) (க|பெ நாகரத்தினம்) மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவுக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது;- நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய மகன் துரை(எ)துரைசாமி மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது திருந்தி வாழ்ந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4மணி அளவில் எனது உறவினர் அனுராதா என்பவரின் வீட்டில் இருந்த என் மகனை சீருடை அணியாத தனிப்படை காவல்துறையினர் 10 பேர் கொடூரமாக தாக்கி இழுத்து சென்றுள்ளனர்.
காயமடைந்த ரவுடிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
பின்னர் என் மகனை என்கவுண்டர் செய்யப்போவதாகவும், எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத என் மகன் மீது கஞ்சா வழக்கு போடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே தாங்கள் திருந்தி வாழ்ந்து வரும் என் மகனை காவல்துறையினர் என்று கூறி அழைத்துச்சென்ற நபர்களிடம் இருந்து மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
காயமடைந்த ரவுடிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இவரின் இந்த மனுவின் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்பட இருந்த ரவுடிகள் மீது இந்த லேசான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாயாரின் மனுவால் இந்த ரவுடிகள் உயிர் பிழைத்தனர். ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil