திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த என் பூலாம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் திடலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.
வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டது. 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணும் விழாவினை காவல் உதவி கண்காணிப்பாளர் ராமநாதன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதையும் படியுங்கள்: பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்: ககன்தீப் சிங் பேடி

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்து களத்தில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு, ஸ்டீல் கட்டில், நாடா கட்டில், வெள்ளிக்காசு, சைக்கிள், LED TV, எவர்சில்வர் பாத்திரங்கள், குக்கர் என பரிசுகள் வழங்கப்பட்டது.

வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து பரிசுகளுடன் மரக்கன்றும் வழங்கப்பட்டது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil