திருச்சி காந்தி மார்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கடையை அவர் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு விடுவதற்காக ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ரங்கராஜனின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடையை காலி செய்ய ரங்கராஜ் கூறிய பொழுது ராஜா முழு தொகையும் கேட்டுள்ளார். ஆனால் ரங்கராஜ் ஒரு லட்சம் மட்டுமே தருவதாக கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: மோடியுடன் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் சந்திப்பு; இதில் அரசியல் இல்லை: அண்ணாமலை பேட்டி
இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜ், ராஜாவை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டது. மேலும் ஆத்திரம் தீராமல் தொடர்ந்து ரங்கராஜ், ராஜாவை பெட்ரோல் எடுத்து ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்பொழுது இன்னொருவர் அவரை தடுத்து சட்டையைப் பிடித்து பின்பக்கமாக இழுத்தார்.
இதில் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் உடலில் பெட்ரோல் கொட்டியதோடு அவரது இடது கையில் இருந்த லைட்டரும் அழுத்தி பற்றிக் கொண்டது.
இதனால் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் வலி தாங்க முடியாமல் ரங்கராஜ் சாலையின் அங்கும் இங்குமாக ஓடினார். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவருக்கு தீ வைக்க நினைத்து தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட வியாபாரியின் நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil