தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்வதும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியைகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி இருக்கின்றது. இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜெர்மன் மேரி. இவர்களது மகள் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஜெர்மன் மேரியின் மகளுக்கு மெட்ராஸ் ஐ காரணமாக 2 நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனை தொடர்ந்து அவர் பள்ளிக்கு சென்ற பொழுது வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பள்ளி ஆசிரியர் கேத்தலின் என்பவர் மாணவியை கண்டித்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தாய் மேரி கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையும் படியுங்கள்: வீடியோ: தென்னந் தோப்பில் புகுந்த மலைப் பாம்பு; கோவை வனத் துறையிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் பெற்றோர் இன்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திருச்சி – புதுகை சாலையில் திடீரென்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து மாணவியின் தாய் மேரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எனது மகள் தெப்பக்குளம் அருகே உள்ள அரசு உதவி பெறும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். எனது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மெட்ராஸ் ஐ இருந்ததால் பள்ளிக்குச் செல்லவில்லை.
இதனை அடுத்து மீண்டும் பள்ளி சென்றபோது எனது மகளை அந்தப் பள்ளியில் பணியாற்றும் கேத்தலின் என்ற ஆசிரியை அடித்திருக்கின்றார். அதில் அவளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்ததை அடுத்து, அவளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்போது சிகிச்சையில் இருக்கின்றார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். கோட்டை போலீசார் நான் வீட்டில் இல்லாத போது எனது மகளிடம் வந்து ஒருமையில் பேசி குழந்தை என்றும் பாராமல் விசாரணை நடத்தி எதையோ அவர்களே எழுதி பேப்பரில் கையெழுத்து வாங்கி சென்று விட்டனர்.
இது குறித்து கோட்டை காவல் நிலையம் சென்று விசாரித்து பள்ளி நிர்வாகத்தின் மீதும் எனது மகளை அடித்த கேத்தலின் ஆசிரியர் மீதும் நான் புகார் கொடுத்தபோது அதை அலட்சியப்படுத்தியதோடு என்னையும் அவமானப்படுத்தினார் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்.
பின்னர் வழக்கறிஞர் துணையோடு சென்று புகார் கொடுத்தபோது மனு ரசீது போட்டுக் கொடுத்து, எஃப்.ஐ.ஆர் கேட்டபோது அலைக்கழித்தனர்.
பின்னர் பள்ளியில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததை அடுத்து பள்ளிக்குச் சென்றபோது, பள்ளியில் ஆசிரியர்கள் எங்களை அவமரியாதைபடுத்தியதோடு எங்களிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கி வெளியே அனுப்பி விட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததற்கு கோட்டை போலீசார் முறையாக விசாரிக்காமல் பள்ளிக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.
மகளுக்கு ஏற்பட்ட அநியாயத்தை தட்டிக் கேட்டபோது பொண்ணு என்ன செத்தா போச்சு என்று எல்லாம் பேசினார்கள் போலீசார். பின்னர் ஏதோ பெயர் அளவுக்கு வழக்கு போட்டு எஃப்.ஐ.ஆர் எங்கள் கையில் திணிக்கப்பட்டது.
ஆகவே, எங்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காகவே காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களுக்கு நீதி, நியாயம் வேண்டும் என அழுது கொண்டே தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் இருக்கும் பிரபல பள்ளியான ஹோலி கிராஸ் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர் என்பதும், அந்தப் பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதும் ஏற்கனவே குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil