Trichy SriRangam Amma Mandamapam closed due to heavy water flow in Cauvery: திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் கரையில், அம்மா மண்டபம் உள்ளது. இங்கு, ஸ்ரீரங்கம் கோவில் உற்சவங்கள் நடைபெறும் போது, ரெங்கநாதர் எழுந்தருளுவார். இங்குள்ள படித்துறையில், இறந்தவர்களுக்கு கரும காரியங்கள் செய்வதாலும், அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் என்பதாலும் அம்மா மண்டப காவிரி கரைக்கு ஏராளமானோர் வருவதாலும், எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.
இந்த நிலையில், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அம்மா மண்டப படித்துறைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கள்ளகுறிச்சி மாணவி மறுபிரேத பரிசோதனை; தந்தையின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு
இது குறித்த விபரம் வருமாறு:
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பியதுடன், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முக்கொம்பு அணைக்கு 1லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அதேநேரம் கொள்ளிடத்தில் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், காவிரியில் 43 ஆயிரம் கனஅடியும், கிளை வாய்க்கால்களில் 2000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிகப்படியான நீர்வரத்து காரணமாக இன்று காலை முதல் அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டுள்ளது, பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
படித்துறையில் இரண்டு கரைகளை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்தபடி சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம் வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், புனிதநீராடி வழிபாடு செய்யவும் முடியாமல் வாசலிலேயே திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.