/tamil-ie/media/media_files/uploads/2023/04/OPS-at-Trichy.jpeg)
திருச்சியில் ஓ.பி.எஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அ.தி.மு.க 51 ஆம் ஆண்டு விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் என்ற ஓ.பி.எஸ் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திருச்சியில் கூட்டினார் ஓ.பி.எஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-10-at-20.33.23-1.jpeg)
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பி.எஸ் அணியின் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க.,வினரே நாடாளுமன்றத்தை முடக்கினர்; திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்
அதனைத் தொடர்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஓ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், மருது அழகராஜ், அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-10-at-20.33.23.jpeg)
கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: திருச்சியில் வருகிற 24 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் தலைவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தந்திருக்கிறார். அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருப்பதாக சொல்வதை நாங்கள் நம்பவில்லை. தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்த மாநாடு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24 ஆம் தேதி நிரூபணமாகும் என்றார்.
திருச்சி திருப்புமுனையை தரும் என்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.,வினர் வரும் 24ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டினை நடத்த இருக்கின்றனர். இதில் சசிகலாவும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.