திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், வரதராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீமகாமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேர்திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தேர் ஊருக்குள் சென்று கொண்டிருந்தபோது இருவேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
பிறகு தேரை ஒரு சமூகத்தினர் தூக்க முயன்றபோது போலீசார் தடுத்து இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தைக்கு பிறகு தூக்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் 3 பேரிடமிருந்து 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
இந்தநிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கல்வீச்சில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதேநேரம் குறிப்பிட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இன்னொரு சமுதாயத்து இளைஞர்கள் தங்கள் கொடியின் வண்ணத்தை பூசி விட்டார்கள். அதை நீக்க சொல்லி அந்த தேவேந்திர குல மக்கள் கோரிக்கை வைக்க, காவல்துறை தலையிட்டு அதை நீக்கும்படி செய்தது.
இந்த வன்மத்தை மனதில் வைத்திருந்து நேற்று இரவு குறிப்பிட்ட சமுதாய மக்கள், தேவேந்திர குல மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் நள்ளிரவில் தேவேந்திர குல மக்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளின் மேல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஓடுகள் உடைந்தன, கூறைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
அந்த பகுதிக்குச்சென்ற காவல்துறையினரும் தங்கள் பங்குக்கு அங்கே நுழைந்து தேவேந்திரகுல இளைஞர்கள் பலரையும், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த சிலரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தற்போது இருபிரிவினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து இன்று அங்கே சென்ற அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர், வழக்கறிஞர் பொன்.முருகேசன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தொட்டியம் காவல் நிலையத்திற்கு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களைக் கூட சந்திக்க முடியாமல் தற்போது சாலையிலேயே நின்று போராடி வருகிறார்.
தொட்டியம் எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன், (தி.மு.க) முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞரும் மேற்கண்ட கட்சியின் தலைவருமான பொன்.முருகேசன் நம்மிடம் தெரிவித்ததாவது; திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் வரதராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாதிக் கலவரத்தை தூண்டியவர்களை கண்டுகொள்ளாத காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
தேவேந்திரகுல இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கியும், பொதுமக்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய முத்துராஜா சமுதாயத்தை சேர்ந்த நபர்களை கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல சமுதாய இளைஞர்களையும் பொதுமக்களையும் சட்டவிரோதமாக இரவில் வீட்டிற்குள் அத்திமீறி உள்ளே நுழைந்து கைது செய்துள்ள திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல்துறை அதிகாரிகளையும் காவல்துறையினரையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
குற்றமாற்றவர்களை விடுவிக்கவில்லை என்றால் சட்டத்தை மீறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் காவலர்கள் மீதும் மனித உரிமை ஆணையம் மற்றும் எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் புகார் கொடுத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சாதிய மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓரிரு நாளில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டும் எனத் தெரிவித்தார்.
இந்தசூழலில், திருச்சி எஸ்.பி., சுஜித்குமார், கூடுதல் டி.எஸ்.பி., குற்றாலிங்கம், முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தொட்டியத்தில் நடந்த சாதிமோதல் தொடர்பாக 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல் ஆய்வாளர்கள் முத்தையன், செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சாதிமோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மோதல் இத்துடன் முடிவுக்கு வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.