TTV Dhinakaran Press meet : இன்று காலை சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைவர் டிடிவி தினகரன் வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடைபெற்று முடிந்த தேர்தல்கள் குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் தினகரனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது அவர் தேர்தலில் நாங்கள் வெற்றியினை எதிர்பார்த்தோம். ஆனால் அது எங்களுக்கு கிடைக்கவில்லை. மக்கள் வழங்கிய இந்த தீர்ப்பினை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று அவர் கூறினார்.
300க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கினைக் கூட பெறாத அமமுக
300க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு வெறும் பூஜ்ஜியம் ஓட்டுக்களே பதிவாகியுள்ளது என்று தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. ஆனால் எங்களின் முகவர்கள் அந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இருந்தனர். தேர்தல் முடிவுகள் தொடர்பான கணக்குகளைப் பார்த்தால் எங்கள் முகவர்களே எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வருகின்ற 28ம் தேதி சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். தேர்தல் தோல்விகளுக்கு காரணம் என்ன என்பது மிக விரைவில் தெரியவரும் என்றும், தேர்தலின் தோல்வி குறித்து வருகின்ற ஜூன் 1ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : 22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்!