டிடிவி தினகரனை மிக மோசமாக விமர்சித்து, அம்முக கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி அமமுக மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச் செல்வன் பேசிய ஆடியோ ஒன்று சமூக தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, அந்த ஆடியோவில் பேசியது நான் தான் ஒப்புக் கொண்ட தங்க தமிழ்ச் செல்வன், நான் சொல்லும் கருத்துகள் பிடிக்கவில்லை எனில், என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க - டிடிவி தினகரனை விமர்சித்து தங்க தமிழ்ச் செல்வன் பேசிய ஆடியோ, முழு விவரம்
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு, சென்னை அடையாரில் உள்ள தினகரனின் இல்லத்தில், அமமுக நிர்வாகிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தங்க தமிழ்ச் செல்வன் ஆடியோ விவகாரம் குறித்து பதிலளித்து இருக்கிறார்.
அவர் கூறுகையில், "மீடியா சொல்வது போல, இது அவசர கூட்டம்-லாம் ஒன்னும் கிடையாது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் தான்.
தங்க தமிழ்ச் செல்வன் மீது பல்வேறு நிர்வாகிகள் நீண்ட நாட்களாகவே என்னிடம் புகார் அளித்து வந்தனர். அவருடைய பேச்சும், செயல்பாடும் சரியில்லை என்று என்னிடம் தெரிவித்தார்கள். நானும் அவரை அடிக்கடி கண்டித்து வந்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து அவரது செயல்பாடுகள் சரியில்லாததைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி அவரை நேரில் அழைத்து, 'இனி ஒருமுறை இப்படி கட்டுப்பாடின்றி பேசினால், உங்களுக்கு பதில், வேறொருவரை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலும், மாவட்ட செயலளார் பதவியிலும் நியமிக்க நேரிடும்' என்று எச்சரித்தேன்.
ஏப்ரல் 19ம் தேதி நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, அமமுகவின் பொதுச் செயலாளரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தோம். தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். மற்ற நிர்வாகிகளை பிறகு அறிவிப்பது என முடிவெடுத்தோம்.
அதனால் தான், அவரை நீக்கம் ஏதும் செய்ய வேண்டாம் என்பதற்காக நான் தள்ளிப்போட்டேனே தவிர, மற்றபடி அவரைக் கண்டு பயமோ, தயக்கமோ ஏதுமில்லை. அதைத் தான் நான் அவரிடமும் சொன்னேன். ஜூலை 1ம் தேதி புதிய நிர்வாகிகளை அறிவிக்க இருக்கிறேன். அதற்கு முன்னதாக, பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்துவிட்டு அறிவிக்கப் போகிறேன் என்று சொன்னேன்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், அவர் ராஜ்ய சபா எம்.பி. கேட்பதாக செய்தி வந்தது. 'எல்லாத்துக்கும் தாவி தாவி பதில் சொல்லும் நீங்க, இதற்கு ஏன் பதில் கொடுக்கவில்லை?' என்று கேட்டேன். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. முதலில், அவர் என்னை நேருக்கு நேர் பார்த்தே பேச மாட்டார்.
அந்த ஆடியோவில் 'நான் விஸ்வரூபம் எடுத்தேன்னா....' என்கிறார். எங்கே விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம். என்னைப் பார்த்தால் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். அன்றைக்கு நைட்டு ஏதோ ஒரு சூழலில் அவர் அப்படி பேசி இருக்கிறார். அவர் எந்த நிலையில், பேசினார் என்பது உங்களுக்கே தெரியும்.
மே 31ம் தேதி கூட்டம் முடிந்த பிறகு கூட, பல நிர்வாகிகள் என்னை வீட்டில் சந்தித்து தங்க தமிழ்ச் செல்வனை பற்றி புகார் கூறினார்கள். இவர் அங்கு மீட்டிங் போட்டு, ரொம்ப மோசமாக பேசியிருக்கிறார். 'சரி, அமைதியா இருங்க' என்று சொல்லி அனுப்பினேன்.
தூங்குபவர்கள் எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அவர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டு இது போன்று பேசி வருகிறார். அவர் இன்று ஒரு மாதிரி பேசுவார், நாளைக்கு ஒரு மாதிரி பேசுவார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஒரு முடிவெடுத்தால், இவர் தனியாக ஒன்றை பேசிக் கொண்டிருப்பார். அப்புறம், அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். நேரா பார்த்து ஏதும் சொல்ல மாட்டார். வெளில போய் பேட்டிக் கொடுத்துகிட்டு இருப்பார். வாய்க்கு வந்ததை பேசிக்கிட்டு இருப்பார். நானும் ரொம்ப நாளா வார்ன் பண்ணிட்டு இருந்தேன். யாரோ அவருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து இருக்காங்க, என்னை தாக்கி பேசுங்கன்னு. அதனால் தான் அவரு பேசி இருக்காரு.
தேர்தல்ல அவரை தேனியில நிற்க வேண்டாம்-னு தான் நான் சொன்னேன். ஏன்னா, அங்க நின்னா, அவர் கண்டிப்பா தோற்பாருன்னு தெரியும். ஏன்னா, இதுக்கு முன்னாடியும் இப்படித் தான் அவர் தோற்றுப் போய், இப்படி பேசிக்கிட்டு இருந்தார். அதனால் அவரை மதுரையில தான் நான் நிற்கச் சொன்னேன். நீங்க மீடியா தான், அவரு ஏதோ ஒரு பெரிய ஆளுபோல உருவகப்படுத்தி, அவரை உசுப்பேற்றி அவரை ஒரே நாள்ல ஒன்னும் இல்லாம ஆக்கிட்டீங்க.
தங்க தமிழ்ச் செல்வன் அமமுகவின் அனைத்துப் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.