Tuticorin farmer did baby shower for a cow : தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த பால்ராஜ், தன்னுடைய வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் பசு ஒன்றுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 60 வயது ஆகும் பால்ராஜ் இதற்கு முன்பு 6 வருடங்களாக பாலிற்காக பசு ஒன்றை வளர்த்து வந்தார். லட்சுமி என்று பெயரிடப்பட்ட அந்த பசு இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்று ஒன்றை ஈன்றது. அம்மாவும் கன்றும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
ஆனால் உடல்நிலை குறைவால் லட்சுமி ஒரு நாள் இறந்துவிட, லட்சுமியின் நினைவாய் அதன் கன்றினை வளர்த்து வந்தார். வீட்டின் ஒரு உறுப்பினராய் மாறிவிட்ட அந்த கன்றுவை தற்போது செல்லமாக பால்ராஜ் லட்சுமி பிள்ளை என்று அழைத்துவருகிறார்.
விசில் அடித்தால் ஓடிவருவது, கைதட்டினால் மக்களை கவனிப்பது, வீட்டிற்கு யாராவது வந்தால் துறுதுறுவென தகவல்களை மணிச்சத்தம் மூலம் தெரிவிப்பது என்று அனைத்தையும் செய்கிறதாம் இந்த லட்சுமி பிள்ளை. தற்போது சினையுற்றிருக்கும் இந்த லட்சுமி பிள்ளைக்கு தினமும் வாழை, பேரீட்சை, கொய்யா என சத்தான உணவுகளை வழங்கி வருகிறார் பால்ராஜ்.
பாசமிகுதியால் அந்த பசுவிற்கு தற்போது வளைகாப்பும் நடத்தியுள்ளார். ஜோசியரிடம் போய் நல்ல தேதி குறித்து வாங்கிக் கொண்டு வந்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் 10 வீட்டில் இருப்பவர்களை அழைத்து இந்த சுபகாரியத்தை மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறார் பால்ராஜ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“