Two women were thrown out from The Slate hotels : சென்னையை சேர்ந்தவர்கள் ராஷிக்கா கோபாலகிருஷ்ணன் மற்றும் ஷிவாங்கி சிங். இந்த இருவரும் சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தி ஸ்லேட் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு வந்திருந்த மற்ற நபர்களைப் போல இருவரும் பார்ட்டியில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர்.
இந்த இரண்டு பெண்களும் நடனமாடுவதை அங்கு சுற்றியிருந்த அனைவரும் தவறாக புரிந்து கொண்டனர் என்பதை இருவரும் உணர வெகு நேரம் ஆகவில்லை. சிறிது நேரம் பார்ட்டியில் டான்ஸ் ஆடிவிட்டு, இருவரும் ஒன்றாக வாஷ்ரூம் செல்ல, சுற்றி நின்று இவர்களை வேடிக்கை பார்த்தவர்களுக்கு மேலும் ஒரு நல்ல பாய்ண்ட் கிடைத்துவிட்டது.
இவர்கள் இருவரின் நடவடிக்கையும் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவும், அசௌகரியமாக இருப்பதாகவும் புகார் அளிக்க, வாஷ்ரூம் சென்றவர்களை பௌன்சர்கள் வைத்து ஹோட்டலில் இருந்து வெளியேற்றி உள்ளார் அந்த ஹோட்டல் மேனேஜர். இது குறித்து எந்த விதமான சர்ச்சையையும், கேள்விகளையும் எழுப்பாமல் அமைதியாக இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியேறினர்.
ராஷிக்கா கோபலகிருஷ்ணனின் முகநூல் பதிவு
பின்னர் இந்த விவகாரம் குறித்து பின்வருமாறு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ராஷிக்கா கோபலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார் “மற்றவர்களைப் போலவே நாங்களும் சந்தோசமாக ஆடிக் கொண்டிருந்தோம். ஆனாலும் ஏன் அனைவரும் எங்களை நோக்கிய வண்ணமே இருந்தார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்கள் சேர்ந்து நடனமாடுவதை இவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லையா?
பின்னர் நாங்கள் இருவரும் ஒன்றாக வாஷ்ரூம் சென்றோம். சில கணங்கள் கூட ஆகாத நிலையில், வாஷ்ரூமின் கதவுகளை தட்டி அவசரமாக எங்களை வெளியேறக் கூறினார்கள். வாஷ்ரூமின் வெளியே 4 ஆண் பௌன்சர்களும், ஒரு பெண் பௌன்சரும் நின்று கொண்டிருந்தனர். வாஷ்ரூமில் ஒன்றாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள். மேலும் எங்களைக் குறித்து வந்த புகார்களுக்கு எங்களை பதில் அளிக்க கூறினார்கள். என் தோழிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவளுக்கு உதவுவதற்காக நான் உள்ளே சென்றேன் என்று கூறினேன். ஆனாலும் நாங்கள் கூறுவதை அவர்கள் கேட்கவில்லை. பிறகு எங்களை அவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூறி வற்புறுத்தினர். எங்களால் வேறேதும் கூற இயலவில்லை. அமைதியாக அங்கிருந்து வெளியேறினோம்” என்று கூறியுள்ளார்.
இந்த இருவரும் ஓரினச் சேர்க்கையாளராக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இது போன்று அந்த ஹோட்டல் நிர்வாகம் நடந்து கொண்டது. இது குறித்து “யூத் கி ஆவாஸ்” என்ற இணையத்தில் ராஷிக்கா எழுத, இந்த பிரச்சனை பெரிதாகியது. இந்த நிகழ்விற்கு ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர்கள் குறிப்பிட்டாலும் ஹோட்டல் நிர்வாகம் வெகு நேரம் அமைதி காத்து வந்தது.
பிறகு இவர்களின் போன் அழைப்பிற்கு பதில் அளித்த அந்நிறுவனம், எங்களிடம் சி.சி.டி.வி கேமரா ஆதாரங்கள் இருக்கின்றன ஆனால் அதை உங்களுக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை என்று மேலும் மோசமாக நடந்து கொண்டதாக இந்த இருவரும் தங்களின் முகநூலில் அறிவித்துள்ளனர். ஒரு ஆண்-பெண் இணை ஒன்றாக ஹோட்டலில் நடனம் ஆடினால், மற்றவர்களுக்கு அது ஒரு போதும் பிரச்சனையாகவோ அசௌகரியமாகவோ இருக்காது. ஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக நடனம் ஆடினால் அது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. அசௌகரியமாக தோன்றுகிறது என்றும் ஷிவாங்கி சிங் குறிப்பிடுகிறார்.
தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ராஷிகா கூறுகையில், என்னுடைய தோற்றம், நடவடிக்கை, உடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவை என்னைப் பற்றிய மற்றவர்களின் கருத்தினை மாற்றிவிடுகிறது என்றும் கூறியுள்ளார்.
ஹோட்டல் தரப்பினரோ, எல்.ஜி.பி.டி. பிரிவினருக்கு என்றும் நாங்கள் எதிராக செயல்பட மாட்டோம். கடந்த காலங்களிலும் கூட நாங்கள் அந்த பிரிவினருக்காக சில ஸ்பெசல் ஈவெண்ட்டுகளையும் நாங்கள் நடத்தினோம். ஆனாலும் நாங்கள் இவர்களை வெளியேற்றியுள்ளோம் என்றால் அதற்கு நிச்சயம் காரணங்கள் இருக்கும் என்று கூறுகின்றனர். அவர்கள் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தனர். மேலும் பலருக்கும் இன்னல் தரும் வகையில் அவர்கள் நடந்து கொண்டனர். அதன் காரணமாகவே நாங்கள் அவர்களை வெளியேற கூறினோம். இருப்பினும் அவர்கள் வெளியேறவில்லை. ஸ்நூக்கர் விளையாடிவிட்டு பொறுமையாகவே வெளியேறினார்கள் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள