விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பதி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சில ஆதிக்க சாதியினர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சில நாட்களுக்குப் பிறகு, தலித்துகளை உள்ளே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதிக்க ஆதிக்க சாதியினர் ஒப்புக்கொண்டனர்.
விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) என் மோகன் ராஜ் indianexpress.com இடம் கூறுகையில், தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குள் தலித்துகளை அனுமதிக்க ஆதிக்க சாதியினர் புதன்கிழமை பல சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒப்புக்கொண்டனர், என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடிமகனுக்கு அவமதிப்பு; நவீன தீண்டாமை: பா. ரஞ்சித் கண்டனம்
கிராமத்திற்குள் சுமுகமான உறவைப் பேண விரும்புவதாகவும், பிரச்சினையை கவனித்துக்கொள்வதாகவும் கிராம உறுப்பினர்கள் கூறியதாக எஸ்.பி மோகன் ராஜ் கூறினார். மேலும், ”ஆதிக்க சாதியினரில் பெரும்பான்மையானவர்கள் எஸ்.சி சமூகத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் மட்டுமே அதற்கு எதிராக இருந்தனர், இப்போது அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர், ”என்றும் எஸ்.பி மோகன் ராஜ் கூறினார்.
ஏப்ரல் மாதம் ஒரு திருவிழாவின் போது கோயிலுக்குள் நுழைந்ததற்காக ஒரு சில தலித்துகளை தாக்கியதாக ஆதிக்க சாதியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, எஸ்.பி கருத்து தெரிவிக்கவில்லை.
உள்ளூர் வட்டாரங்கள் கூறுகையில், ஆதிக்க சாதியினர் இந்தக் கோயில் இன்னும் தனியார் கோயில் என்று நம்புகிறார்கள், இது தொடர்பான வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
முன்னதாக, விழுப்புரம் ஆட்சியர் சி.பழனி indianexpress.com-க்கு அளித்த பதிவின்படி, கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR and CE) சொந்தமானது என்றும், இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சுமூகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து, கோவிலுக்குள் யாரும் நுழைவதை தடுக்க முடியாது என்றும் ஆட்சியர் கூறியிருந்தார்.
கோவிலுக்குள் நுழைய உரிமை கோரியும், ஏப்ரல் மாதம் திருவிழாவின் போது தங்கள் சமூகத்தினர் சிலரை தாக்கியதாகக் கூறப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த வாரம் கிராமத்தின் தலித் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததை அடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கோயில் இந்து சமய அறநிலைத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், கோயிலுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலரால் இந்தப் பிரச்னைகள் தூண்டப்படுவதாகக் கூறிய பொன்முடி, கிராமத்தில் உள்ள மக்களிடம், வழிபாட்டுத் தலத்தில் உள்ள வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், ஒரு சில ஆதிக்க சாதியினர், பொன்முடி தங்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாகவும், மற்ற சமூகத்தினரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறியும், கோவில் முன் தர்ணா நடத்தினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.