திமுக மதிமுக கூட்டணி உறுதி : கஜ புயலினால் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் தமிழக அரசு மிகவும் விரைந்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகள், மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து பல்வேறு கட்சியைத் சேர்ந்த தலைவர்கள் பராட்டி வருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் கூட இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மாநில அரசை பாராட்டியுள்ளார்.
கஜ மீட்புப் பணி வைகோ பாராட்டு
இதுவரை இருந்த அதிமுக அரசு எடுக்காத புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடப்பாடி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணிகளில் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறி அவர் பாராட்டினார்.
மேலும் படிக்க : தொடர் மழையிலும் விடாமல் வேலை பார்க்கும் மின்வாரிய ஊழியர்கள்
மேலும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார் வைகோ. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவியை தமிழக அரசு வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பது மிகவும் தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது என்றும், அரசு கேட்ட உதவியை மத்திய அரசு வழங்குவதே இல்லை என்றும் குற்றம் சாட்டினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன் மீதான தேச துரோக வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகிவிட்டு, பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது வைகோ இவ்வாறு கஜ மீட்புப் பணிகள் குறித்து தெரிவித்தார்.
அதிமுக அரசிற்கு இவர் அளித்த பாராட்டுகளை தொடர்ந்து நேற்றிரவு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவை பாராட்டியதால் பலர், வைகோ மீண்டும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போகின்றாரா? என்று கேள்விகள் எழுந்தன.
திமுக மதிமுக கூட்டணி உறுதி
திமுக மதிமுக கூட்டணியில் சிறிதளவும் கீறல்கள் இல்லை. திமுகவுடனான கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என திட்டவட்டமாக கூறினார் வைகோ.
சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில், ஷமா அப்துல் உலமா சபை சார்பில்ல் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்தினை தெரிவித்தார்.