MDMK Chief Vaiko Convicted: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேற்படி தேசத் துரோக வழக்கு பற்றிய விவரங்கள் இங்கு தரப்படுகின்றன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்து வருபவர். இதையொட்டி பொடா வழக்கிலும் கைதாகி சிறை சென்றவர். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.
Vaiko Case Judgement
Vaiko Sentenced on Sedition Charges: தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு சிறை
அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியதாக கூறி வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேச துரோக குற்றம் (124 ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட்டது.
இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்: இது தேச துரோகம் என்றால், இதைத் தொடர்ந்து செய்வேன் - வைகோ அதிரடி
இந்நிலையில் நான் குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழா பேச்சு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார் வைகோ. பிறகு 52 நாட்கள் கழித்து மே 25ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.
பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ- கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.
வைகோ மீதான தேசத்துரோக வழக்கு : குற்றவாளி என்று அறிவித்தது நீதிமன்றம்
பின்னர், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.
அந்த வழக்கில் இன்று (ஜூலை 5) காலை தீர்ப்பளித்த நீதிபதி, வைகோவுக்கு எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என அறிவிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டர்.
இந்த வழக்கு திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்டது. தற்போது திமுக அணியில் இணைந்து, இந்த மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி. ஆகும் முடிவில் இருக்கிறார் வைகோ. அவருக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கிக் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு மதிமுக.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பவர்கள், தேர்தலில் நிற்க தடை இருக்கிறது. அந்த அடிப்படையில் வைகோ, எம்.பி. ஆவதற்கு இந்த தண்டனை சிக்கலை உருவாக்கும் என தெரிகிறது. அதேசமயம் தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், தேர்தலில் நிற்க தடையில்லை என்கிற கருத்துகள் வருகின்றன.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அவர் அப்பீல் செய்ய வசதியாகத்தானே தவிர, எம்.பி. ஆக அல்ல என்றும் ஒருசாரார் கருத்து கூறுகிறார்கள். இதில் ஒரு தெளிவான பதில் கிடைப்பதைப் பொறுத்தே வைகோ எம்.பி. ஆக முடியும் என தெரிகிறது.