Vanitha Vijayakumar Interview : நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் குறித்தும் வீட்டை காலி செய்வது தொடர்பாக இதுவரை என்ன நடந்தது என்றும் விவரித்தார்.
பிரபல நடிகர் விஜயகுமார் தனது மகள் வீட்டை காலி செய்து தர மறுப்பதாகவும், உடனே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வனிதா விஜயகுமார் மீது புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அவர், வேப்பேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வனிதா விஜயகுமார் பேட்டி :
செய்தியாளர்கள் பேட்டியில் அவர் கூறியதாவது:
“நான் இப்போது இருந்த இல்லத்தில் தான் இருக்கிறேன். அந்த இல்லத்தின் பெயரே மஞ்சுலா இல்லம் தான். அந்த வீட்டில் எப்போதும் ஷூட்டிங் நடப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போ அதே இல்லத்தில் நான் படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் பெயர் ‘டாடி’. 20 நாள் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. இது என் அப்பா மற்றும் கூட பிறந்த அனைவருக்கும் தெரியும்.
இப்போது யாரோ ஒருவர் இந்த வீட்டை காண்டிராக்ட்டிற்காக கேட்டிருக்கிறார்கள். என் அப்பா இதற்காக என்னை மிரட்டினார். நீ வாடகைக்கு கூட வேறு எங்கேயாவது சென்றுவிடு. இந்த இடத்தை காலி செய்துவிட்டு செல் என்றார். நான் முன்பு வாடகைக்கு தான் இருந்தேன். ஆனால் என் அம்மாவுடன் இருந்த அந்த வீட்டில் அவர் இறந்த பிறகும் இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனெனில் என் அம்மா என்னுடன் இருப்பது போலவே இருக்கும். புரொடக்ஷ் செய்வதாலும் எனக்கு அந்த வீடு வசதியாக இருந்தது.
என் அப்பா 10 நாட்களுக்கு முன்பு திடீரென தொல்லை கொடுக்க தொடங்கினார். அப்போ நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பையும் நிறுத்தினார். என்னிடம் இந்த இடத்தை விட்டு வெளியே போ, நான் அனைத்து பொருட்களையும் வெளியே எரிந்துவிடுவேன், வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சத்தம் போட்டார். வேறு ஒருவருக்கு வாடகைக்கு தருவதாக சொன்னார்.
சரி வாடகை தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் இந்த வீட்டை நான் வெளியே ஷூட்டிங்கிற்கு கொடுத்து கூட உங்களுக்கு நான் வாடகை தருகிறேன் ஆனால் அதற்காக என்னை வீட்டை விட்டு வெளியே துறத்தாதீர்கள் என்று கேட்டேன். எங்க அப்பா அதையெல்லாம் கேட்கவில்லை. அவருடன் இருப்பவர்கள் அவர் மனதை மாற்றி எனக்கு எதிராக திருப்பிவிட்டனர்.
எனவே இந்த திங்கள் கிழமை நான் சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அந்த மனுவில், இது என் அம்மாவின் வீடு. நான் அந்த இல்லத்தில் தங்கியிருக்கிறேன். அந்த வீட்டை கட்டிய பணத்தில் நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணமும் உள்ளது. எனவே என்னை அந்த இல்லத்தில் இருந்து வெளியே துறத்தக் கூடாது என்று கொடுத்திருக்கிறேன். இந்த விஷயம் அவர்கள் காதுக்கு சென்றவுடனே அவர்கள் உஷார் ஆகிவிட்டனர்.
கோர்ட்டுக்கு சென்றால் இந்த விவகாரம் இழுபறியாகும், எனவே நீதிமன்றம் சென்வதற்கு முன்பே என்னை அடித்து வெளியே துறத்த முடிவெடுத்துவிட்டார்கள். அதற்காக மதுரவாயில் காவல்நிலையத்தில் பேசி, அனைத்து செட் அப்பையும் செய்து ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டார்கள். இது குறித்து போலீஸ் என்னிடம் பேசியபோதே, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வேளையில் போலீஸ் தலையிடக் கூடாது என்று கூறிவிட்டேன். இருப்பினும் அவர்கள் நேற்று மாலையில் ஷூட்டிங் நடைபெற்றிருந்தபோது சுமார் 15 போலீஸ் வந்தனர். வீட்டின் உள்ளே புகுந்து எல்லோரையும் அடித்து தரதரவென இழுத்து வேனில் ஏத்தி கைது செய்தனர்.
அதை தடுக்க சென்றபோது போலீஸ் என்னை தாக்கினார்கள். ஆபாச வார்த்தைகளால் என்னை ஏசினார்கள். என் உடைமைகளையும் என்னிடம் இருந்து வாங்கி கொண்டார்கள். வெளியே செல்ல முடியாது என்று கூறிய பிறகும், என்னையும் என் 13 வயது பெண்ணையும் தாக்கினார்கள். எங்கள் இருவரையும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசினார்கள்.
நான் மீடியாவுடன் சண்டை போட்டேன் என்று கூறினார்கள். மீடியா தான் எனக்கு பக்கபலமே. மீடியா இருக்கும் தைரியத்தில் தான் என்னை இன்னும் போட்டுத்தள்ளாமல் இருக்கிறார்கள். யாரோ ஒருவர் கேமரா ஃபோன் கொண்டு வந்து வீடியோ எடுத்தார்கள். ஏன் வீடியோ எடுக்கிறீகள் என்று கேட்டேன். என்னிடம் பணமில்லை சொந்த காலில் நிற்க படம் எடுத்து பிழைத்து வருகிறேன்.
இதில் நான் ஏதோ தலைமறைவாகிவிட்டேன் என்று கூறுகிறார்கள். போலீஸ் என்னை தேடவில்லை நான் தான் போலீஸை தேடுகிறேன். நான் தவறு செய்திருந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல முடியுமா? என் அம்மா வீட்டில் நான் இருந்தேன். என் தந்தை விஜயகுமார் தானே என் தாய் மஞ்சுலா தானே அப்போ எனக்கு அந்த வீட்டில் உரிமை இல்லையா.
நான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கேன் என்று கூறுகிறார். சொந்த பெண்ணுக்கு யாராவது வாடகைக்கு விடுவார்களா? அதுவும் வாடகைக்கு இருந்தால் என் பாஸ்போர்ட், ஆதார் அட்டையில் எல்லாம் இந்த விலாசம் கொடுத்திருக்க முடியுமா? என்னை வேண்டுமென்றே எதற்காகவோ பழி தீர்க்க இப்படி செய்கிறார்கள். என் தந்தை விஜயகுமார் மற்றும் தாய் மஞ்சுளாவிற்கும் பிறந்த முதல் குழந்தை நான். எனவே எனக்கு இந்த வீட்டில் எல்லா உரிமையும் இருக்கிறது.” என்று பேசினார்.
போலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.