சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி அருகே ரவிக்குமார் எம்.பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி இன்று பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும், இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் வீட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டி பகுதியில் ரவிக்குமார் எம்.பி தலைமையில் அவரது வீட்டினருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில வெளியீட்டு மைய செயலாளர் பொன்னிவளவன் மற்றும் வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சாவர்க்கர் பிறந்த நாளில் பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்து மாணவர் கூட்டமைப்பு தலைமையில் பொதுநல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சாவர்க்கார் பிறந்த நாளில் பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும், இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்தும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முத்தியால்பேட்டை திருக்குறள் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் களம் அழகர், தி.மு.க மாணவரணி மணிமாறன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, மாணவர் காங்கிரஸ் அர்ஷவர்தன், மறுமலர்ச்சி தி.மு.க கபிரியேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரசாந்த், ஓவியரசன், தமிழரசன், பிரவீன் பிர்லா, சபரி ஆகியோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil