மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பா.ம.க, பா.ஜ.க - திருமாவளவன் பேச்சு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்பது தி.மு.க தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தையும் உணர்த்துவதாக நான் நம்புகிறேன் – திருமாவளவன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்பது தி.மு.க தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தையும் உணர்த்துவதாக நான் நம்புகிறேன் – திருமாவளவன்

author-image
WebDesk
New Update
Thirumavalavan protests against Puducherry Jipmar hospital fee collection

இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 14 தனியார் வங்கிகளை தேசிய மையம் ஆக்கினார்கள். ஆனால் தற்போது தேசிய வங்கிகளை எல்லாம் மோடி தனியார் மையம் ஆக்கி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

திருச்சியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவனை தி.மு.க வெளியேற்ற நினைக்கிறது என தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பா.ம.க, பா.ஜ.க என பேசியுள்ளார்.

Advertisment

திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இன்று செய்தியாளர்களிடம், "நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவது குறித்து தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், தி.மு.க கூட்டணியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது துணிச்சலான முடிவை நெஞ்சார பாராட்டி வி.சி.க வரவேற்கிறது. தி.மு.க முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வி.சி.க உற்ற துணையாக இருக்கும். பா.ஜ.க தலைமையிலான சனாதன சக்திகளை, 2024-ல் நடைபெறக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என மு.க ஸ்டாலின் அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ராமஜெயம் கொலை வழக்கை மீண்டும் சிபிஐக்கு மாற்ற வாய்பில்லை : டிஜிபி உறுதி

தி.மு.க.,வுக்கும், வி.சி.க.,வுக்கும் இடையே உரசல், முரண்பாடு மற்றும் இடைவெளியை உருவாக்க, சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இதற்கு வாய்ப்பு இல்லை. கனவு காணும் சக்திகள் ஏமாற்றம் அடைவார்கள். கூட்டணி தொடர்பான நிலைபாடு, ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படுகின்ற சிறிய பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என வி.சி.க.,வுக்கும் தெளிவு இருக்கிறது, தி.மு.க.,வுக்கும் புரிதல் இருக்கிறது. திருமாவளவன் உள்நோக்கத்துடன் பேசுகிறார், முதல்வரை பா.ம.க தலைவர் சந்தித்தால் அச்சப்படுகிறேன், கலக்கமடைகிறேன் எனப் பேசுகின்றனர். கற்பனையான கருத்து. முதல்வர் என்ற முறையில் யாரும் சந்திக்கலாம், பா.ஜ.க.,வினரும் சந்திக்கலாம். பிரதமர் என்ற முறையில், அவரை நானும் சந்திக்கலாம். ஒருவரையொருவர் சந்திப்பதால் கூட்டணி வைக்க போகிறோம் என்பதல்ல.

Advertisment
Advertisements

பா.ம.க.,வுக்கு ஒரு கலாச்சாரம் உண்டு. கூட்டணியில் இருப்பார்கள், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ, அந்தக் கூட்டணியில் இருந்து விலகி இருப்பார்கள். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் 2 அணி தலைவர்களுக்கும் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவார்கள். நான், இந்தப் பக்கமும் பேச முடியும், அந்தப் பக்கமும் பேச முடியும். ஓரே அணியில் இல்லை என்பதை தெரிவிப்பார்கள். அப்படி இருந்தால் பேர வலிமையை கூட்ட முடியாது. பேரத்தின் வலிமையை கூட்டுவதற்கு, ஒரு சூழ்ச்சி மற்றும் தந்திரத்தின் அடிப்படையில் பா.ம.க செயல்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.க விலகி இருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில், நாங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என தி.மு.க கருத தேவையில்லை, தி.மு.க.,வுடனும் பேச தயாராக இருக்கிறோம் என்ற சமிக்கை. தி.மு.க.,வுடன் பேசுவோம் என அ.தி.மு.க.,வுக்கு சொல்வதுதான் நோக்கம். இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைக்கிறோம் என்ற யுக்தியை கையாளுகின்றனர். தி.மு.க.,வுடன் பேசிக் கொண்டே அ.தி.மு.க.,வுடன் பேரத்தை முடிப்பது, அ.தி.மு.க.,வுடன் பேசி கொண்டே தி.மு.க.,வுடன் பேரத்தை முடிப்பது, இதுதான் பா.ம.க.,வின் தேர்தல் தந்திரம்.

தி.மு.க கூட்டணியில் வி.சி.க உறுதியாக இருக்கிறது. அகில இந்திய அளவில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒருங்கிணைக்க தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும், முன்மொழிய வேண்டும், இதற்கான முயற்சிகளை முன்னின்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். தி.மு.க.,வுக்கும், வி.சி.க.,வுக்கும் இடையே எந்த சக்தியாலும் இடைவெளியை ஏற்படுத்த முடியாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்பது தி.மு.க தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தையும் உணர்த்துவதாக நான் நம்புகிறேன். அகில இந்திய அளவில் வழிகாட்ட கூடிய வலிமை பெற வேண்டும் என மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர்.

மேற்கு மாவட்டங்கள் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்காது என சிலர் கூறிய ஆரூடம், பொய்த்துப் போனது. மேற்கு மாவட்ட அரசியல் வரலாற்றில், தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. விமர்சனங்களை கடந்து, தி.மு.க.,வை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். தி.மு.க கூட்டணி மீதான நன்மதிப்பை, வெற்றி உணர்த்துகிறது. வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பா.ம.க என்ற சாதி வெறி கட்சியுடனும், பா.ஜ.க என்ற மதவெறி கட்சியுடன், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. அவர்கள் இடம் பெறுகின்ற அணியில் இருக்க மாட்டோம் என வி.சி.க கொள்கை முடிவு எடுத்துள்ளது. இது தி.மு.க.,வுக்கு மறைமுகமாக சொல்கிறோம். அ.தி.மு.க.,வுக்கு மறைமுக சைகை காட்டுகிறோம் என்றால், அது உங்களின் யூகம். எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. கட்சியின் ஆதாயத்துக்காக மக்களின் உணர்வுகளை தூண்டுகின்றனர்.

ஒரு சமூகத்தின் நலனுக்கு பாடுபடுவது தவறில்லை. ஒரு சமூகத்தின் மக்களின் உணர்வுகளை கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் தூண்டிவிடுவது, அதையே பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் மத வெறியாகவும், சாதி வெறியாகவும் மாறுகிறது. இதனால் பகை, மோதல், முரண்பாடு உருவாகிறது.

மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பா.ம.க, பா.ஜ.க. அப்படிப்பட்ட யுக்திகளைதான் அவர்கள் கையாளுகின்றனர். வடக்கில் முஸ்லிம் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள், தருமபுரியில் தலித் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஓரே வழியில் பயனிப்பவர்கள். நாங்கள், எங்கள் கட்சி சார்ந்து ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இது மக்களுக்கான செய்தி, வேறு யாருக்கும் இல்லை" என்று திருமாவளவன் கூறினார்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: