விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பத்தில் விஷ சாராயம் குடித்த 11 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஷ சாராயம் விற்ற முக்கிய குற்றவாளியான அமரன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேடு பகுதியில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரன் வயது (25) என்ற பிரபல கள்ளச்சாராய வியாபாரி தொடர்ந்து புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்று வந்துள்ளார். இவர் விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியர் குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று மாலை குடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: அந்தத் தொழில் செய்த நடிகை: பொறி வைத்து பிடித்த போலீஸ்!
இந்த கிராமத்தை சேர்ந்த சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65), மண்ணாங்கட்டி (55) உள்ளிட்ட ஆறு பேர் கள்ளச்சார பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். ஆறு பேரும் வீட்டிற்கு சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர். இவர்களை உடனடியாக உறவினர்கள் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர், தரணி வேல் ஆகிய மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற அனைவரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ நாதா எக்கியர் குப்பம் மீனவர் பகுதிக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இச்சம்பவம் குறித்து நேரில் விசாரித்தார். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்து இருந்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஐந்து பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் மது அருந்திவிட்டு யாரேனும் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக எக்கியார் குப்பத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. தற்போது மண்ணாங்கட்டி என்பவரும், மலர்விழி என்பவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமரன் விற்ற கள்ள சாராயத்தை குடித்துவிட்டு எக்கியர் குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த சுப்புராயன் வயது (60) என்பவரும் இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். விஷ சாராயத்தை குடித்துவிட்டு மூன்று பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஷ சாராயம் விற்றவர்களை கைது செய்ய எஸ்.பி ஸ்ரீ நாதா உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியான பிரபல கள்ளச்சாராய வியாபாரி அமரன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 நிதியுதவி அளித்துள்ளார்.
இதற்கிடையில், இச்சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட மரக்காணம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.