விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தூர் அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிப்பிப்பாறை அருகே இயங்கி வருகிறது.
மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக பட்டாசு ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. பேன்ஸிரக பட்டாசு தயாரித்தபோது வெடி மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு – சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஐகோர்ட் உத்தரவு
இந்த வெடிவிபத்தில் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. ஆலையில் இருந்த 13-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரை மட்டமாயின.
இந்த விபத்தில், ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த தென்காசி மாவட்டம் மைப்பாறையை சேர்ந்த ராணி(42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32) தங்கம்மாள் (39) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முருகையா (49), சுப்பிரமணியன், பொன்னுத்தாய், சுப்பம்மாள், அய்யம்மாள், மாடசாமி, பேச்சியம்மாள், முருகலட்சுமி, ஜெயராம் ஆகிய 9 பேரும் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த 9 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்போது, சிகிச்சை பலனின்றி முருகையா உயிரிழந்தார். அதையடுத்து, பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
முரசொலி நில விவகாரம் – ராமதாஸ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை
தகவலறிந்த சிவகாசி, கழுகுமலை, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பார் பி.பெருமாள், சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இது இம்மாதத்தில் இரண்டாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”