திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி துரைசாமி, நேற்று அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவர் கடந்த 18-ம் தேதி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களை பாஜக தலைமை அலுவலகமான, கமலாலயத்தில் சந்தித்திருந்தார். தவிர திமுக குறித்து அவதூறு பரப்பும் வகையில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். நேற்று துரைசாமியின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், இன்று பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
ஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
கமலாலயத்தில் நடைபெற்ற இந்த இணைவு நிகழ்வில், பாஜக மூத்த தலைவர் இல கணேசன் உட்பட, நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் முருகன், மூத்த தலைவர் இல கணேசன், கட்சியில் புதிதாக இணைந்த வி.பி துரைசாமி உள்ளிட்டோர், பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முருகன், "2006-ல் பாஜக சார்பில் சங்ககிரி தொகுதியில், சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோது, அண்ணன் துரைசாமி அதே தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து திமுகவின் சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பதவி வகித்தார். அதேபோல் 2011 ராசிபுரம் தொகுதியில் இருவரும் போட்டியிட்டோம்.
ஆகையால் அவருடன் எப்போதுமே எனக்கு தொடர்பு இருந்திருக்கிறது. பாஜகவின் கொள்கைகளை எந்தவித சமரசமும் இல்லாமல், அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என, என்னைத் தட்டிக் கொடுத்து இருக்கிறார். எனக்கு வாழ்த்து சொல்ல வந்ததற்காக அவரது பதவியை பறித்தது மிகப்பெரிய அபத்தம். திமுக தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க அரசியலில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்த ஒரு தலைவர், இன்றைக்கு நமது கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை வருக வருக என வரவேற்கிறேன்” என்றார்.
அவரைத் தொடர்ந்து வி பி துரைசாமி செய்தியாளர்களிடம் பேசினார். ”நான் வேறு கட்சியில் இருந்து இருந்தாலும், நானும் தம்பி முருகனும் வைணவ குலத்தைச் சேர்ந்தவர்கள். பெருமாளை வணங்கக் கூடியவர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் விரதமிருந்து வழிபாடு நடத்தி அதன்படி வளர்ந்தவர்கள். மிகவும் இறை பக்தி உள்ளவர்கள். தமிழ் கடவுளான முருகன் பெயரை வைத்திருக்கிறார். தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது இப்படி மாறி இருக்கிறது. தமிழர்கள் அதிகம் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது தவறு என்றால் நான் என்ன சொல்வது?
நான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் யாருடைய மனதையும் புண்படுத்தி பேசுவதை விரும்பாதவன். தேசம்தான் முக்கியம். இந்த தேசத்தை முன்னிறுத்துகின்ற தலைவர் யார் என்று பார்த்தால், இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் கூட, இந்தியாவை முன்னேறும் நாடு என்றுதான் சொல்ல முடியும். முன்னேறிய நாடு என்று சொல்ல முடியாது. முன்னேறிய நாடு என்று சொல்லக்கூடிய அமெரிக்க ஜனாதிபதியே பாரத பிரதமர் மோடியின், உறுதுணை இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.
Corona Live Updates : உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார், என்று சொன்னால் என்னைப் போன்றவர்கள், அவருடன் தானே இருக்க வேண்டும். அதுதானே நியாயம். ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை. என் உழைப்பை திருடி விட்டார்கள். என் உழைப்புக்கு ஊதியம் இல்லை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன். இப்போது ஒரு இளைஞரிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்புகளைப் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டேன். வார்த்தைகள் வரவில்லை” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”