சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சர்கார் விமர்சனம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் திரைப்படம் சர்கார். கதை திருட்டு புகாரில், பாக்யராஜ் கிளைமேக்ஸ் வரை கதை சொல்லியதால், இப்படத்தின் கதை, படம் வெளிவருவதற்கு முன்னரே பலருக்கும் தெரிய நேரிட்டது. இருப்பினும், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் வெளிவந்தது.
நேற்று முதல் நாளிலேயே படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று விமர்சனம் எழுந்தது. இருந்தாலும், விஜய் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு சர்கார் முதல் நாளில் மட்டும் 30 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே, வெளியான முதல் நாளில் அதிகம் கலெக்ட் செய்த படம் சர்கார் தான் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க - எங்க தல முருகதாஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா? சர்கார் கேரக்டர்களின் பின்னணி
படத்தில் வரும் பல காட்சிகள் நிகழ்கால அரசியல் நிகழ்வுகளோடு பிண்ணப்பட்டுள்ளது. குறிப்பாக, படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ள வரலக்ஷ்மியின் கேரக்டர் பெயர் 'கோமலவள்ளி' என வைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயராகும்.
இந்நிலையில், இன்று காலை சர்கார் படம் குறித்தும், விஜய் குறித்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. அந்தக் காட்சிகளை படக்குழுவினர், அவர்களாகவே நீக்கி விடுவது நல்லது.
மேலும் படிக்க - மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா! சூடுபிடிக்கும் சர்கார்
அப்படி சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்போம். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வரிடம் விவாதிப்போம்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும். சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பால், சர்கார் பிரச்சனை அடுத்தடுத்த நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - பாக்ஸ் ஆபீஸில் சர்கார் அமைத்த விஜய்... கம்முனு இருந்ததால் ஜம்முனு ஒரு வெற்றி