Chandrayaan 2: சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முயற்சியில், சிக்னல் கிடைக்காமல் போனது. சந்திரயான் நிலவில் தரையிறங்கும் வரலாற்று சம்பவத்தை இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பெங்களூருவிலுள்ள, விண்வெளி கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல் கிடைக்காமல் போனது. இதனால் நாடே அதிர்ச்சியடைந்தது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வண்ணம் பேசிய மோடி, ஏற்ற தாழ்வு நிறைந்தது தான் வாழ்க்கை என்றும், தைரியமாக இருக்கும்படி கூறியுள்ளார்.
Chandrayaan 2 Landing Live: நாடும், நானும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் – பிரதமர் மோடி
"ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது தான் வாழ்க்கை. இது ஒரு சிறிய சாதனை அல்ல. தேசமே உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது. சிறப்பான ஒன்றிற்காக நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் இந்த தேசத்திற்கும், அறிவியலுக்கும், மனித குலத்துக்கும் ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளீர்கள். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன், தைரியமாக முன்னேறுங்கள்” என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார்.
”இந்தியா நம் விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறது! அவர்கள் இந்தியாவை பெருமைப் படுத்தும் விதமாக சிறப்பான விஷயத்தை செய்திருக்கிறார்கள். இப்போது தைரியமாக இருக்க வேண்டிய தருணம், நாம் தைரியமாக இருப்போம்!
இஸ்ரோவின் தலைவர் சந்திரயான் -2 குறித்த அப்டேட்டுகளைக் கொடுத்தார். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், விண்வெளி திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்.” என்று மற்றொரு ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார் மோடி.
பின்னர் இன்று காலை பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், ”தடைகளை சந்தித்தாலும் அவற்றை தாண்டி இருக்கிறோம். நாம் இன்னும் வலிமை அடைய வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. விண்வெளி சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நிலவை தொடுவதற்கான நமது பயணம் தொடரும். நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும். பல நாட்கள் தூக்கம் இன்றி நமது விஞ்ஞானிகள் உழைத்து இருக்கிறார்கள். நாட்டுக்காக இந்திய விஞ்ஞானிகள் வாழ்கின்றனர்.
இன்னும் உழைத்து நிச்சயம் வெற்றியை எட்டுவோம். நம்ப முடியாத அளவிற்கான வெற்றியை நீங்கள் தொட்டு இருக்கிறீர்கள். இதற்கு முன்பு யாரும் தொடாத வெற்றியை தொட்டு இருக்கிறீர்கள். புதிய உச்சங்களை இனிதான் அடைய இருக்கிறோம். நீங்கள் மீண்டு வந்து மீண்டும் வெற்றியை எட்டுவீர்கள். இது ஒரு பயணம்தான். பயணத்தில் வெற்றி பெற நீங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள். கடைசி நிமிட தோல்வி நிரந்தரமில்லை. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன” என்று தெரிவித்தார்.
மோடி பேசும் போது சில பெண் விஞ்ஞானிகள் அழுதனர், பின்னர் இறுதியாகப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவனும் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்து தைரியம் கூறிய மோடியும் கண் கலங்கினார்.