வதந்திகளுக்கு தந்தி அடித்த வாட்ஸ் அப் - தகவல்கள் பகிர புதிய கட்டுப்பாடு
WhatsApp Feature Update: புதிதாக அனுப்பப்படும் தகவல்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்பலாம். ஆனால், மற்றவர்கள் ஃபார்வேர்ட் செய்த தகவலை மீண்டும் பலருக்கு ஃபார்வேர்ட் செய்யும்போதுதான் புது நிபந்தனை கட்டுப்படுத்தும்
WhatsApp: வாட்ஸ் அப் செயலி மூலம் வதந்திகள் பகிரப்படுவதை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாட்டை விதிக்க வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு புறம் இருக்க சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து பகிரப்படும் பொய்ச் செய்திகளுக்கும் விளக்கமளித்து வருகின்றனர்.
சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் தான் அதிகமாக போலிச்செய்திகள் பகிரப்பட்டு வருகிறது என்று குற்றச்சாட்டுகள் இருந்துவரும் நிலையில், தற்போது வாஸ்ட் அப் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்படும் செய்திகளை இனிமேல் ஒருவருக்கு மட்டுமே அனுப்பமுடியும் என்பதுவே அது.
இதற்கு முன்பு வரை 5 நபர்களுக்கு ஒரு மெசேஜை ஃபார்வார்ட் செய்ய முடிந்ததாக இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கையை 1 ஆக குறைக்க வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக அனுப்பப்படும் தகவல்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்பலாம். ஆனால், மற்றவர்கள் ஃபார்வேர்ட் செய்த தகவலை மீண்டும் பலருக்கு ஃபார்வேர்ட் செய்யும்போதுதான் புது நிபந்தனை கட்டுப்படுத்தும்.
ஏற்கெனவே, பலருக்கு ஒரே நேரத்தில் ஃபார்வேர்ட் செய்யும் வசதியை கட்டுப்படுத்தி, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்ட் செய்யும் வசதி கொண்டு வந்த பிறகு, ஃபார்வேர்ட் செய்யும் தகவல்களின் போக்கு 25 % குறைந்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் 40 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.