ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண் பகிர்வு குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இன்று காலை உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை எங்கெல்லாம் பயன்படுத்தலாம், எதெற்கெல்லாம் தேவைப்படாது என்பதை வரையறுத்துக் கூறியது. மேலும் ஆதார் சட்டத்தினை நிதி மசோதாவாக தாக்கல் செய்யக் கோரி நாடாளுமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஆதார் எண் தேவையில்லை
இந்நிலையில் பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளுக்கும் ஆதார் எண் இணைப்பு தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று தொலைபேசி எண் வாங்குவதற்கு இனி ஆதார் எண் அவசியம் இல்லை.
மேலும் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடஃபோன், ஐடியா போன்ற செல்லுலார் நிறுவனங்கள் இனிமேல் உங்களின் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி வற்புறுத்தமாட்டார்கள். சேவை தடுத்து நிறுத்தப்படும் என்ற கவலையில்லாமல் வாடிக்கையாளர்கள் இனி மொபைல் சேவையினை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க ஆதார் அட்டை கட்டாயம் பற்றி என்ன கூறியது உச்ச நீதிமன்றம்
ஆதார் சட்டத்தின் 57வது பிரிவானது அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பானது என்று கூறிய நீதிபதி, ஒரு தனியார் நிறுவனம் எதற்காக ஆதார் அட்டை எண்ணை கேட்க இயலும் என்று கேள்வி எழுப்பினார்.
மொபைல் நெட்வொர்க் சேவைகளைப் போலவே பேட்டிம் மற்றும் அமேசான் பே பாலன்ஸ் போன்ற ஆன்லைன் வாலட் சேவைகளும் இனி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தமாட்டார்கள். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
யூஐடிஏஐ இணைய தகவல்படி ஆதார் கார்டின் சேவையை ரிலையன்ஸ் ஜியோ அதிகமாக பயனாளர்களிடம் இருந்து பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல், வொடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார்கள் அதிக அளவில் ஆதார் எண்களை வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் இணைத்துள்ளனர். இன்றைய தீர்ப்பினை கணக்கில் கொண்டால் இந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மூலம் கொடுக்கப்பட்ட ஆதார் தகவல்கள் அனைத்தும் விரைவில் நீக்கப்படும்.