TRAI Channel Selector Application : தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்து, அதனை மட்டும் பார்ப்பதற்கு மக்கள் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற புதிய கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்திய தொலைத் தொடர்பு ஆணையம். அதன் மூலம் தாங்கள் பார்க்காத சேனல்களுக்கு மக்கள் பணம் கட்ட தேவையில்லை. இதனால் தேவையற்ற பண விரையம் தவிர்க்கப்படும்.
இந்த சட்டம் வருகின்ற பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. ட்ராய் தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள 100 அல்லது அதற்கு மேற்பட்ட சேனல்களை தேர்வு செய்வதற்காக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கேபிள் டிவியில் தங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்வது, புதிய கேபிள் டிவி பில்கள் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள், மற்றும் விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளா வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த செயலி.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த செயலியின் மூலம் தாங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு சேனலிற்கான விலைகளை அறிந்து கொள்ள இயலும்.
தங்களுக்கு விருப்பமான 100 சேனல்களை தேர்வு செய்த பின்னர், தங்களின் டிடிஎச் அல்லது கேபிள் ப்ரொவைடர்களின் இணைய தளத்திற்கு சென்று தங்களின் விருப்பத் தேர்வினை தெரிவிக்கலாம். அல்லது லோக்கல் டிவி ஆப்பரேட்டர்களிடம் தங்களுக்கு தேவையான சேனல்களின் பட்டியல் குறித்து அறிவிக்கலாம்.
மேலும் படிக்க : டாட்டா ஸ்கை வெளியிட்டிருக்கும் சேனல்களுக்கான புதிய கட்டணங்கள்
TRAI Channel Selector Application - இந்த செயலி எப்படி செயல்படும் ?
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த உங்களின் பெயர், மாநிலம், மொழி ஆகியவற்றை நீங்கள் உள்ளீடாக அளிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான 100 சேனல்களை நீங்கள் தேர்வு செய்தால் அது உங்களுக்கான பேக்காக செயல்படும்.
உங்களால் ஹை டெஃபனிஷன் மற்றும் ஸ்டாண்டர்ட் டெஃபனிஷன் என்ற இரண்டு வகையான சேனல்களை தேர்வு செய்து கொள்ள இயலும். ஆனால் ஒவ்வொரு HD சேனலும் இரண்டு SD சேனல்களுக்கு சமமாக கணக்கில் கொள்ளப்படும்.
நீங்கள் ஒவ்வொரு சேனல்களாக தேர்வு செய்யும் போது அதன் கட்டணம் மேலே உங்களுக்கு காட்டப்படும். இலவச சேனல்களை தேர்வு செய்தாலும் கூட உங்களின் நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸில் மாற்றம் இருக்காது.
ஆனால் நீங்கள் பே (கட்டணம் கட்டி பார்க்கும் அலைவரிசை) சேனல்களை தேர்வு செய்தால் கட்டணம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.
உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்த பின்னர், அதனை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளவதற்கான வசதிகள் இந்த செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் இந்த திட்டத்தில் இரண்டு முக்கியமான விசயங்களை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் கேபிள் வாடகை - 130 ரூபாய்.
அதன் பின்பு நீங்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணங்கள் மற்றும் அதற்கான 18% ஜி.எஸ்.டி வரி. நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணம் + சேனல்களுக்கான கட்டணம் + 18 சதவீத ஜி.எஸ்.டி
இலவச சேனல்கள் அல்லது கட்டண சேனல்கள் அல்லது பொக்கெட்ஸ் ஆஃப் சேனல்கள் என வாடிக்கையாளர்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். 25 சேனல்கள் வரை கூடுதல் சேனல்களுக்கு 20 ரூபாய் தனியாக வசூலிக்கப்படும்.
125 முதல் 150 வரை என்றால் அதற்கு தனியாக மற்றும் ஒரு 20 ரூபாயை கட்டணமாக கட்ட வேண்டும். வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, 534 இலவச சேனல்கள் இருக்கின்றன. அதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.