Advertisment

சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்

solar eclipse in india 2019: சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கூற்றுக்கள் போலல்லாமல், சமைத்த உணவு கெட்டுப்போவதில்லை, அல்லது வெளியே சென்று கிரகணத்தைப் பார்ப்பது தீங்கு விளைவிப்பதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்

tomorrow surya grahanam timing in tamilnadu, solar Eclipse in Chennai, solar Eclipser in Chennai, what is solar Eclipse, Rahu ketu surya grahanam,நாளை சூரிய கிரகணம்,

Surya grahan news today: இந்த ஆண்டின் கடைசியாக டிசம்பர் 26ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், நாளை கிரகணத்தின் போது, ​​சூரியன் ஒரு குறிப்பிட்ட  தருணத்தில் ‘நெருப்பு வளையமாக’ தோன்றும்.

Advertisment

இந்த காட்சி தென்னிந்தியாவின் சில பகுதிகளில் தெரியும். கர்நாடகாவில் மங்களூர் அல்லது மடிகேரியில் வசிப்பவர்கள்; கேரளாவில் டெல்லிச்சேரி , காலிகட், பால்காட் போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் ; தமிழ்நாட்டில் ஊட்டி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், பழனி, திண்டுக்கல், கருர், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, அம்மாபட்டினம்,முத்துப்பேட்டை  போன்ற  பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டு களிக்கலாம் .

பாதி சூரிய கிரகணம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் தெரியுமென்பதால், பிற பகுதிகளில் உள்ள மக்கள் அதனால் விரக்தியடையத் தேவையில்லை..

எந்த நேரத்தில் சூரிய கிரகணம்: சந்திரன் -  சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் ஆட்கொள்வதால் சூரியனை முழுவதுமாக மூடப்படும் நிகழ்வையே நாம் சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம்.  சரியாக, காலை 8:00 மணிக்கு கிரகணம் தொடங்கும். அதிகபட்ச கிரகணம் காலை 9.30 மணியளவில் இருக்கும். காலை 11:16 மணியளவில் கிரகணம் நிறைவடையும். வருடாந்திர (annularity) வரிசையில் இருப்பவர்களுக்கு, காலை 9.30 மணியளவில், சூரியன் நெருப்பு வளையம் போல் தோன்றும்.

அடிப்படைத் தகவல் : 

நண்பர்களே, பொதுவாக சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியதாகும். பூமி -சந்திரன்  இடையிலான தூரத்தை விட , சூரியன் பூமியிலிருந்து 400 மடங்கு தொலைவில் உள்ளது.   

400 மடங்கு அளவில் குறைவாக இருக்கும் சந்திரன் எவ்வாறு முழு சூரியனை நாளை மறைக்க முடியும்?   

இதில் அதிக சூட்சமம் உள்ளது, அதை நாம் தெளிவு படுத்தினால் தான் சூரியக் கிரகணத்தை நம்மால் உண்மையாக புரிந்து கொள்ள முடியும்:

பொருள்கள் நமக்கு நெருக்கமாக இருக்கும்போது, அவை தொலைவில் உள்ள பொருட்களை விட பெரியதாகத் தோன்றும்.(அறிவியல் கோட்பாடு - 1)

உதாரணமாக, இரவில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் சிறு வெள்ளை புள்ளிகள் போல் தோற்றம் அளிக்கின்றதல்லவா ? உண்மையில், இந்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் நமது சூரியன் விட பலமடங்கு பெரியவை. இருப்பினும், பூமியிலிருந்து அவைகள் வெகு தொலைவில் இருப்பதால் அவை புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.

இப்போது, நமது அடிப்படைத் தகவலை மீண்டும் படித்து பாருங்கள்.சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக இருந்தாலும், இது சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது.  இதில நாம் புரிந்து கொள்வது என்னவென்றால்,பூமியிலிருந்து, சந்திரனும் சூரியனும் வானத்தில் ஏறக்குறைய ஒரே அளவாகத் தான் உள்ளன.

இருப்பினும், சில நேரங்களில் மட்டும் தான் , சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து சூரியனின் பார்வையை ஓரளவு தடுக்கிறது. அதுதான் பகுதி(பாதி ) சூரிய கிரகணம்.

சில நேரங்களில், சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் மிகச் சரியாக வானில் சீரமைக்கப்பட்டிருப்பதால்,சந்திரன் சூரியனின் முழு முகத்தையும் ஒரு குறிப்பிட்ட  தருணத்தில் தடுக்கின்றது . இதனால், நாம் ஒரு முழு சூரிய கிரகணத்தை பெறுகிறோம்.

இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம்... எப்போது துவங்கி எப்போது நிறைவடைகிறது?

வருடாந்திர கிரகணம் என்றால் என்ன ? 

வருடாந்திர சூரிய கிரகணம் என்பது முழு சூரிய கிரகணத்தின் ஒரு வகையாக உள்ளது. நாம் ஏற்கனவே கூறியது போன்று   சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது, ஒரு குறிப்பிட்ட நாளில்,சந்திரனின் வெளிப்படையான அளவு சூரியனின் வெளிப்படையான அளவை விட சிறியதாக உள்ளது.

இதனால் சூரியனின் மையப் பகுதி மட்டுமே சந்திரனால் தடைபடுகிறது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட  தருணத்தில் ‘நெருப்பு வளையமாக’ சூரியன் தோன்றுகிறது.

 

இதற்கு என்ன காரணம் ? 

பூமி நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகிறது. 

​​ஒரு கட்டத்தில், வழக்கமாக ஜனவரி 3முதல் 5-ம் தேதிகளில், பூமி சூரியனுக்கு மிக நெருக்கமாகவும், ஜூலை 3-4 தேதிகளில்  சூரியனை விடுத்து தொலைதூரமாகவும் உள்ளது.  நாம் ஏற்கனவே பார்த்த (அறிவியல் கோட்பாடு - 1) படி  ஜனவரி 3 தேதிகளில் சூரியன் பெரியதாகவும், ஜூலை 4 தேதிகளில் சூரியன் சிறியதாகவும் தோன்றும்.

இது ஒருபுறம் இருக்க,

சந்திரன் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றுகிறது -  கிட்டத்தட்ட 27.55 நாட்களுக்கு ஒரு முறை சந்திரன் பூமியை சுற்றி முடிகிறது.

எனவே, சந்திரன் மாதம் ஒவ்வொரு முறை பூமிக்கு மிக நெருக்கமாகவும், பூமியை விட்டு மிக தூரமாகவும் பயணிக்கின்றது.

சூரியன் ஒப்பீட்டளவில் நெருக்கமாகவும் (டிசம்பர், ஜனவரி மாதத்தில் ) சந்திரன் தொலைவிலும் இருக்கும்போது மொத்த சூரிய கிரகணம் ஏற்பட்டால், சூரியனின் வெளிப்படையான அளவு சந்திரனின் வெளிப்படையான அளவை விட பெரியதாக இருக்கும் (அறிவியல் கோட்பாடு 1). அந்த சூழ்நிலையில், சந்திரனால் சூரியனின் முழு முகத்தையும் மறைக்க முடியாது. மையப் பகுதி மட்டும் சந்திரனால் மூடப்பட்டிருக்கும்.  அதே வேளையில், சூரியனின் விளிம்புகள் ‘நெருப்பு வளையமாக’ நிற்கும். இதுவே,  வருடாந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

எனவே, டிசம்பர் 26 அன்று, பூமி சூரியன் மிக நெருக்கமான இடத்திற்கு அருகில் உள்ளது,மறுபுறம், சந்திரன் பூமியை விட்டு தொலைதூரத்தில் உள்ளது.  எனவே, நாளை சிறிய சந்திரனால் சூரியனின் முழு வட்டுக்கும் இடையூறு செய்ய முடியாது.

நாம் ஏன் எல்லா இடங்களிலும் அதைப் பார்க்க முடியாது?

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். A எனக் குறிக்கப்பட்ட புள்ளி சந்திரனையும் சூரியனையும் இணைக்கும் நேர் கோட்டில் சரியாக உள்ளது. எனவே, பூமியில் இந்த புள்ளியில் இருப்பவர்கள்  நாளை வருடாந்திர சூரிய கிரகணத்தைக் காணலாம்.(சூரியனின் மையப் பகுதியை மட்டும் தடுப்பதால்)

 

publive-image

பி புள்ளியில் இதற்கு மாறாக, சந்திரனின் திசை சூரியனின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. எனவே, சூரியனின் ஒரு பகுதி மட்டுமே தடைபடும். எனவே, பி புள்ளியில் வசிப்பவர்களுக்கு, ஒரு பகுதி (பாதி) சூரிய கிரகணம் மட்டுமே உள்ளது.

இருப்பினும், சி புள்ளியில், சந்திரனின் திசை சூரியனின் வழியில் எங்கும் இல்லை . எனவே இந்த இடத்தில் கிரகணம் இல்லை.

 

கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி ? 

எந்த பிரகாசமான பொருளும் நம் கண்களுக்கு அச்சுறுத்தல் தான். பிரகாசமான ஒளி நிரந்தர விழித்திரை சேதத்தை ஏற்படுத்தி தீங்கை விளைவிக்கும். எனவே, தான்  பாதுகாப்பற்ற முறையில் மின்னல் அல்லது வெல்டிங்கில் வரும் ஃபிளாஷ் லைட் பார்க்க வேண்டாம் என்று நாம் அறிவுருத்தப்படுகிறோம்.

சூரியக் கிரகணமாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாளானாலும் சரி, சூரியனை முறைத்துப் பார்க்க வேண்டாம் .  சூரியனை பாதுகாப்பாக கவனிக்க இரண்டு வழிகள் உள்ளன. கிரகணத்தைப் பார்ப்பதற்காக குறிப்பாக உருவாக்கப்பட்ட சூரிய வடிப்பானை (பொதுவான கண்ணாடி அல்ல) பயன்படுத்தலாம். அல்லது ஒரு தொலைநோக்கி அல்லது பின்ஹோல் கேமராவைப் பயன்படுத்தி சூரியனின் ப்ராஜெக்ட் செய்து பார்க்கலாம்.  (சூரியனை நேரடியாக ஒரு தொலைநோக்கி அல்லது பின்ஹோல் கேமரா மூலம் பார்க்க வேண்டாம்).

நீங்கள் சூரிய கிரகணத்தை பாதுகாப்பாய் பார்க்க உங்களுக்கு தேவைப்படும் வீடியோ:

கிரகணத்தின் போது சூரியன் ஏதேனும் ‘தீங்கு விளைவிக்கும் கதிர்களை’ வெளியிடுகிறதா?

கிரகணம் என்பது ஒரு வெளிப்படையான நிகழ்வு. நாம் பயன்படுத்தும் ஒரு குடை அல்லது மரம் சூரியனைத் தடுத்து நிழலை அளிப்பது போல, கிரகணத்தின் போது சந்திரன்  சூரியனை தடுப்பதால் அதன் நிழல் பூமியில் விழுகிறது.  எனவே, இது சூரியனில் நடக்கும் நிகழ்வு அல்ல  (அல்லது) அதை பாதிக்கும் ஒரு நிகழ்வு அல்ல. எனவே கிரகணத்தின் போது எந்த மர்ம கதிர்களும் சூரியனில் இருந்து வெளிப்படுவதில்லை. நிழலுக்கு அஞ்சுவது மனிதனல்ல.

பிறகு, ராகு மற்றும் கேது பற்றி ? 

ராகு, கேது ஆகியோரின் புராண பின்பங்கள் இந்தியாவின் கலாச்சார ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது. இருப்பினும், பண்டைய இந்திய வானியலாளர்களான ஆர்யபட்டாவும் , லல்லாச்சார்யாவும்  இந்த புராண பின்பங்களை நிராகரித்தனர்.

இந்திய வானியல் ஆய்வை பொருத்தவரை, கிரகணங்களுக்கு முதன்முதலில்  ஒரு அறிவியல் விளக்கத்தை முன்வைத்தவர் ஆர்யபட்டா. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆர்யபட்டியம் என்ற தனது படைப்பில், ஒரு இடத்தில் இவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறார் ; 'சந்திரனின் நிழல் பூமியில் விழும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது, மேலும் சந்திரன் பூமியின் நிழல் நுழையும் போது சந்திர கிரகணங்கம்  நிகழ்கிறது' என்று.

1300 ஆண்டுகளுக்கு முன்பு லல்லாச்சார்யாவால் எழுதப்பட்ட  சிஷ்யாதிவ்ருதிதா தந்திரம் வானியல் மாணவர்களுக்கான கையேடாக உள்ளது. ராகு-கேது புராணங்களையும் புராணக் கூற்றுகளையும் தெளிவாக நிராகரிக்கிறது இந்த புத்தகம்.  இந்திய கலாச்சாரத்தின் விஞ்ஞான பாரம்பரியம் ஆர்யபட்டா மற்றும் லல்லாச்சார்யாவின் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான படைப்புகளில் வேரூன்றியுள்ளது, ஆதாரமற்ற கட்டுக்கதைகளால் அல்ல.

கிரகணத்தின் போது சாப்பிடுவதும் வெளியே செல்வதும் பற்றி:  

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கூற்றுக்கள் போலல்லாமல், சமைத்த உணவு கெட்டுப்போவதில்லை, அல்லது வெளியே சென்று கிரகணத்தைப் பார்ப்பது தீங்கு விளைவிப்பதில்லை என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வானத்தில் நடக்கும் ஒரு இயற்கையான  நிகழ்ச்சி.

மேலும், சில தகவல்களுக்கு 

  1.  இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம்
  2. இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம்... எப்போது துவங்கி எப்போது நிறைவடைகிறது?

 

இந்த கட்டுரை பின் வரும் ஆய்வுக்கட்டுரையின் மூலம் எழுதப்பட்டது : 

1.https://vigyanprasar.gov.in/isw/Here-is-all-you-wanted-to-know-about-annular-solar-eclipse-of-December26.html

2.https://en.wikipedia.org/wiki/Solar_eclipse

3. https://spaceplace.nasa.gov/eclipses/en/

4.https://spaceplace.nasa.gov/total-solar-eclipse/en/

 

Solar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment