YouTube removes 1 lakh hate speech policy violating videos : சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் நம்மையும் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் சமூக மாற்றங்களை உருவாக்க வேண்டும். தொலைவு என்பது ஒரு பொருட்டே இல்லை. கண் முன்னே நம் உறவினர்கள் நிற்கின்றார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நினைப்பில் தான் பல சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டன.
லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வீடியோக்கள்
ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மற்றவர்கள் திட்டுவதும், இகழ்வதும், அவர்கள் பதிலுக்கு களம் இறங்குவதும், திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு வார்த்தை ஜாலங்களில் வீரங்கள் காட்டி வெறுப்பினை மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். ஆனால் இது போன்ற, சமூகத்திற்கு அச்சுறுத்தல் தரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜூன் மாதம் முடிவு செய்தது யூ.டியூப்.
அதனைத் தொடர்ந்து இந்த மூன்று மாத காலங்களில் 1 லட்சம் வீடியோக்கள், மற்றும் 17 ஆயிரம் சேனல்களை நீக்கி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கூகுள் நிறுவனம். இதற்கு முந்தைய காலாண்டில் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் சேனல்களை விட இது 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ரெட்மி நோட் 8 ப்ரோ : 64 எம்.பி. கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அபாரம்
வீடியோக்கள், சேனல்கள் மட்டுமல்ல, சமயங்களில் வெறுப்பினை விதைக்கும் கமெண்ட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. ஸ்பாம் மற்றும் மிஸ்லீடிங் கேட்டகிரியில் இதுவரை இல்லாத அளவில் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 9 மில்லியன் வீடியோக்கள் மற்றும் 4 மில்லியன் சேனல்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஒத்துவராத, இணங்காத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூட்யூபர்களையும் கண்டறிந்துள்ளது இந்நிறுவனம்.