Nallai Thamizh Cartoon videos went viral on social media :தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி தமிழ் பேசுவோம்... எங்கே சென்றாலும் சொந்த ஊர்க்காரர்களை பார்த்தால் அப்படியே நாக்கில் ஒட்டிக் கொள்ளும் நமக்கான தமிழ். சென்னை செந்தமிழ், கொஞ்சும் கொங்கு தமிழ்ன்னு சொன்னாலும் கூட, தென் தமிழகம் என்றால், மதுரை, நாகர்கோவில், நெல்லை என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஒலியமைப்போடு தமிழ் தாளம் போடும்.
Advertisment
சமீபத்தில் நெல்லைத் தமிழின் வாசம் சற்றும் குறையாமல் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஹிட் அடிக்க, அனைவரும் அதை பகிரவும் செய்தார்கள். ஏதோ ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் தான் இருக்கும் என்று பார்த்தால் ஒரு யூடியூப் சேனல் முழுவதும் நெல்லைத் தமிழ் வாசம் மணக்கும் கார்ட்டூன் வீடியோக்கள் தான்.
ஒரு குடும்பம், ஒரு அக்கா, ஒரு தங்கை - பெரும்பாலான வீடியோக்களில் இவர்கள் மட்டும் தான் முக்கிய கதாப்பாத்திரங்கள். அம்மா பெயர் ராணி. அவரின் மகள்கள் பெயர் சத்யா மற்றும் சோனியா. பள்ளிகளில் இவர்களுடன் நட்பில் இருக்கும் சிலராக வந்து செல்கிறார்கள் நெடுதூரம் வளர்ந்து நிற்கும் சின்னப்பொண்ணும், பூமாரியும். சில நேரங்களில் அந்த சகோதரிகள் செல்லும் பள்ளிகள் மற்றும் பொதுவெளியில் பேசும் நிகழ்வுகளையும் சுவாரஸ்யம் குறையாமல் வீடியோவில் பதிவேற்றியுள்ளார் சோனியா மகி என்பவர். நீங்கள் இதற்கு முன்பு இந்த வீடியோக்களை பார்க்கவில்லை என்றால் இன்று உங்களை எண்டெர்டெய்ன் செய்யும் ஒரு யூடியூப் சேனலாக நிச்சயம் இது இருக்கும்.
கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேலே ஃபாலோவர்களை கொண்ட இந்த யூடியூப் சேனலில் எண்டெர்டெய்மெண்டிற்கு சற்றும் குறைவே இருக்காது. நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் நடைபெறும் உரையாடல்கள் தான் இந்த கார்ட்டூனில் இடம் பெற்று மிகவும் எதார்த்தமாக நம்மை மகிழ்விக்கிறது. தன்னுடைய பள்ளி நாட்களில், தன்னுடைய வீட்டில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையில் தான் இந்த வீடியோக்களை உருவாக்கி வருகிறேன் என்று அந்த யூடியூப் பதிவர் தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil