viral video of villagers chasing wild elephants in karnataka : நாம் எப்படி வனவிலங்குகளின் தாக்குதல்கள் ஏதும் நடைபெற கூடாது என்று அஞ்சி விலகுகின்றோமோ அப்படியே வன விலங்குகளும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு பொதுவாக வர விரும்புவதில்லை. உணவு தேவை, நீர் தேவை மற்றும் வலசை செல்லும் பாதைகள்ளில் ஏற்படும் தடைகளால் சில தவிர்க்க முடியாத சூழல்கள் அரங்கேறுவதும் உண்டு.
சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ஐந்து ஆண் யானைகள் கால்வாய் ஒன்றில் சிக்கிக் கொண்டன. அவைகள் அங்கிருந்து செல்ல முயற்சி மேற்கொண்டாலும் கால்வாயின் கரைகளில் ஏற முடியவில்லை. வழுக்கிக் கொண்டு செல்கிறது. தொடர்ந்து அங்கிருந்து யானைகள் வெளியேற முயற்சி செய்கின்ற போது மனிதர்கள் கூட்டமாக கூடி யானைகளை கூச்சலிட்டு அச்சுறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். மனிதர்களின் செயல்கள் குறித்து தங்களின் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.
மனிதர்களிடம் இருந்து தப்பித்து எப்படியாவது காட்டுக்குள் ஓடிவிடவேண்டும் என்ற பரிதவிப்பு அந்த யானைகளிடம் இருந்ததை உணர முடிந்தது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நாகர்ஹோலே வனப்பகுதியில் இருந்து வழி தவறிய யானைகள் ஹனகோடு என்ற கிராமத்திற்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வனத்துறையினருக்கு பின்னர் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் காட்டு யானைகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் துரத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil