Tamil Nadu Lok Sabha Election 2019 Controversies: ரெய்டு, கலவரம், வாழைப்பழம்; தகதகத்த தமிழக தேர்தல் களம்! ஓர் பார்வை

Top Controversies During Tamil Nadu Lok Sabha Election 2019: தமிழக தேர்தல் களம்

By: Updated: May 22, 2019, 01:32:16 PM

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. இவ்வளவு லென்த்தா தேர்தல் நடத்தியிருக்கத் தேவையில்லை என்ற சலிப்புகள் ஆங்காங்கே கேட்டாலும், வெற்றிகரமாக நேற்று(மே.19) மாலையோடு வாக்குபதிவு முழுவதும் முடிந்துவிட்டது. அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு எக்ஸிட் போல் வெளியாகி கருத்து கணிப்புகளை பரவ விட்டிருக்கிறது. எல்லாம் மே 23ம் தேதி வரையே. அன்று தெரிந்துவிடும் யார் ஆட்சியமைக்கப் போவது என்று!.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், சம்பவங்கள் குறித்தும் சிறிய தொகுப்பை இங்கே காணலாம்.

மேலும் படிக்க – Lok Sabha Election 2019 Controversy: சௌகிதார் அடைமொழி முதல் குகை தியானம் வரை… 70 நாட்கள் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்!

வேலூர் தேர்தல் ரத்து

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மக்களவை தேர்தலின் போது, ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வேலூர் மக்களவை தொகுதி அந்த சாதனையை நிகழ்த்தியது. அதிமுக கூட்டணியில் வேலூரில் களமிறங்கியவர் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். அவரை எதிர்த்து திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டார். முதன் முதலாக கதிர் ஆனந்துக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலூர் தொகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.11 கோடிக்கும் மேல் பணம் சிக்கியது.

இதனால், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க, அதை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மேலும் படிக்க – கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் அல்ல… கடைசி 3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தான் இதற்கு உதாரணம்!

கனிமொழி வீட்டில் ரெய்டு

தூத்துக்குடியில் ஏப்ரல் 16ம் தேதி கனிமொழி தங்கியிந்த குறிஞ்சி நகர் வீட்டில் வருமானவரித் துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு இந்த ரெய்டு நீடிக்க, செய்தி தகதகவென திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா?’ என்று கேள்வி கேட்டும், பெரிதாக ரியாக்ட் இன்று வெளியேறியது வருமான வரித்துறை.

இந்தச் சோதனையில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – Tamil Nadu Lok Sabha Constituencies List: ஆட்சி மாறுமா? திமுக கனவு பலிக்குமா? தமிழக மக்களவை தொகுதிகள் ஒரு பார்வை

இதனால் டென்ஷனான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “வேலூர் தொகுதி தேர்தல் ரத்து – தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையக் கோட்பாடு பிரதமர் நரேந்திர மோதியின் காலில் மிதிபட்டு கிடக்கிறது – ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை நீங்களே உருவாக்கி விட வேண்டாம்” என்று எச்சரித்தார்.

முதல்வரையே அலற வைத்த வாழைப்பழம்

ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாய் பணப் பட்டுவாடா செய்யப்படும் வீடியோக்கள் சமூக தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, முதல்வர் பழனிசாமியே வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதாக வீடியோ என்று வைரலாக உற்று நோக்கியது தேர்தல் ஆணையம்.

சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநகர பகுதிகளில் இன்று (ஏப்ரல் 16) வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள வாழைப்பழம் விற்கும் பெண்ணிடம் அதிமுக வேட்பாளரின் படம் அச்சிட்ட துண்டு அறிக்கையை கொடுத்து வாக்கு கேட்டார். அந்தப்பெண்ணிடம், பழ வியாபாரம் எல்லாம் எப்படி நடக்கிறது? பழங்களை எந்தெந்த ஊர்களில் இருந்து வாங்கி சந்தைக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்றெல்லாம் சிரித்தபடியே கேட்டார். பிறகு, அப்பெண் முதல்வருக்கு ஒரு வாழை சீப்பை அன்பளிப்பாக கொடுக்க, அதற்கு தான் முதல்வர் 500 ரூபாய் கொடுத்தார்” என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், தொலைக்கட்சியில் தொலைபேசி வாயிலாக முதல்வர் பழனிசாமியே இதை தெளிவுப்படுத்தியது தான்.

பொன்பரப்பி கலவரம்

பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, கடந்த ஏப்ரல் மாதம் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில் பல வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் தான் இந்த வன்முறை அரங்கேறியது.

திருமாவளவனின் தோ்தல் சின்னமான பானையை பாமகவினர் சிலா் சாலையில் போட்டு உடைத்ததாகவும், அதை சிலா் தட்டிக்கேட்ட போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்பட்டது. இதனையடுத்து குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – தமிழகத்தின் அரசியலை புரட்டிப்போடுமா 22 தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள்?

கோட்சேவை வம்பிழுத்த கமல்ஹாசன்

கிட்டத்தட்ட தேர்தல் களம் கிளைமேக்ஸை நெருங்கியிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பற்ற வைத்த நெருப்பு கிட்டத்தட்ட ஒருவாரம் எரிந்தது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய கமல், “தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் அது தவறு தான். இந்து தீவிரவாதி என்று இங்கு முஸ்லீம்கள் கூடியிருக்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை. காந்தி சிலை முன்பு நின்றுகொண்டு கூறுகிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. நான் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன். அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன்” என்று சொல்ல தேசிய அளவில் இவ்விவகாரம் ‘விஸ்வரூபம்’ எடுத்தது. அவரின் ‘விஸ்வரூபம்’ சினிமா கூட இவ்வளவு பெரிய ஹிட்டாகவில்லை.

தேர்தலில் கமல்ஹாசனுக்கும், அவரது கட்சிக்குமான முக்கியத்துவம் அண்டர் லைம் லைட்டில் இருந்த சூழ்நிலையில், கமலின் ‘இந்து தீவிரவாதி’ எனும் பன்ச் பிரதமர் நரேந்திர மோடியையே பதில் சொல்ல வைத்தது.

‘ஸ்டாலின் பாஜகவோடு பேசினார்’ – பற்ற வைத்த தமிழிசை

தேர்தல் கிளைமேக்ஸில் நடந்த மற்றொரு ஹைலைட் நிகழ்வு தமிழிசை போகிற போக்கில் ஸ்டாலின் பற்றி  சொன்ன கருத்து. கடந்த மே 14ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ” தேர்தலில் நாங்கள் தான் வெற்றிப் பெறுவோம் என்பதை தெரிந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் பேசினார்” என்று ஒரு போடு போட பற்றிக் கொண்டது தமிழக அரசியல்.

மறுநாளே அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “திருமதி தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது திரு நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று சவால் விடுக்க, ‘எப்போது தேவையோ அப்போது நிரூபிப்போம்’ என்று தமிழிசை சைலண்ட்டாக சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu election 2019 controversies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X