செங்கோட்டையன்
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக 40 ஆண்டுகளாக கொடி கட்டி பறந்து வருபவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் எந்த ஹீரோக்களாலும் இப்படி திரையுலகை கட்டி ஆள முடிந்ததில்லை. அவர்கள் ஒவ்வொருவரது ஆயுளும் அதிகபட்சம் 5 அல்லது 10 ஆண்டுகள் தான். தென்னிந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தி என்றால் இன்றும் ரஜினி தான். அதனால்தான் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் வீச்சும் அவ்வளவு வீரியமிக்கதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேசினால் அது தொலைக்காட்சியில் ஒரு வாரத்துக்கு விவாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ரஜினியின் சகாப்தம் முடிந்தது என பிரச்சாரத்தை சிலர் ஆரம்பித்துள்ளனர்.
ரஜினி என்பதும், சூப்பர் ஸ்டார் என்பதும் சாதாரணமாக ஓரே நாளில் நிகழ்ந்தவை அல்ல. 40 ஆண்டுகால கடும் உழைப்பில் உருவான இடம். தமிழ் சினிமாவில் ரஜினி வைத்த ரெக்கார்டுகளை ரஜினியால் மட்டுமே முறியடிக்க முடியும். மற்ற ஹீரோக்களுக்கு பெரும்பாலும் ரஜினியல்லாத (Non Rajini) ரெக்கார்டு தான். அந்த வகையில் அதிக நான் ரஜினி ரெக்கார்டுகளை வைத்திருப்பது விஜய் தான். அதனாலேயோ என்னவோ விஜய் ரசிகர்களில் ஒரு சாராரும், ரஜினி முதலிடத்திலேயே இருப்பதை விரும்பாத பத்திரிக்கையாளர்கள், வசூல் நிலவரம் சொல்லும் ஒரு சில வணிக நிபுணர்களும் விஜயை ரஜினிக்கு போட்டியாக வைக்க முயற்சி செய்து சில வேலைகளை செய்து வருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வசூல் கணக்குகள் மிகவும் வெளிப்படையானவை அல்ல. தோராயமான கணக்குகள் தான். அதை தங்களுக்கு சாதகமாக ஏற்றியும், விரும்பாத நடிகர்களுக்கு குறைத்தும் சொல்வது வாடிக்கையாகி விட்டது. அது தான் தற்போது காலாவில் நிகழ்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் வியாபாரத்தை பொறுத்தவரை ரஜினியின் வசூல் இந்தியாவில் 50% என்றால், வெளிநாடுகளில் 50%. மற்ற நடிகர்களுக்கு இந்தியாவில் 70-90% வசூலும், வெளிநாடுகளில் வசூல் மிகவும் சொற்பமாகவும் இருக்கும். மொத்த வசூலில் ரஜினியின் இடத்தை எட்டி பிடிக்க நம் ஹீரோக்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
எந்திரன் ரிலீஸுக்கு பிறகு ரஜினி உடல் நிலை சரியில்லாமல் போய் 4 ஆண்டுகள் ஓய்வில் இருந்த போது கூட, எந்திரனுக்கு முன்பு வந்த சிவாஜியின் வசூலை யாரலும் முறியடிக்க முடியவில்லை. ரஜினி திரும்ப வந்த பிறகு, 9 ஆண்டு சாதனையாக இருந்த சிவாஜி வசூலை விஜயின் தெறி படம் எட்டி பிடித்தது, ஆனால் முறியடிக்கவில்லை. பின்னர் வந்த மெர்சல் மட்டுமே சிவாஜியின் வசூலை முறியடித்திருக்கிறது. ஆனால் அதற்குள் ரஜினி கபாலி என்ற இன்னொரு மாபெரும் ரெக்கார்டை வைத்தார். ஆக, எந்திரன், கபாலி என இரண்டு படங்களை மற்றவர்கள் தொடுவதற்குள் ரஜினியே அடுத்து 2.0 என்ற மாபெரும் ரெக்கார்டை வைப்பார்.
கபாலி, எந்திரன் படங்களின் வசூலை காலாவாலும் தொட முடியவில்லை. ஆனாலும் மெர்சல், ஐ தவிர மற்ற நடிகர்களின் அனைத்து படங்களின் வசூலையும் 10 நாட்களிலேயே தாண்டி விட்டது காலா. ரஜினி படத்துக்கான வசூல் இது கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த மாதிரி ஒரு முழுக்க சமூக கருத்தை பேசும் படம் 150 கோடிகளை தாண்டி வசூலிப்பது என்பது ரஜினியை தவிர வேறு யாராலும் முடியாது.
காலாவின் வசூல் மற்ற ரஜினி படங்களை ஒப்பிடும்போது குறைவாக இருப்பதற்கு பலவித காரணங்களும் உள்ளன. முதல் முக்கிய காரணம் ரஜினி, ரஞ்சித் கூட்டணி பலராலும் விரும்பப்படவில்லை. கபாலி படத்தினால் ஏமாற்றம் அடைந்தவர்கள் ஒரு புறம், ரஞ்சித் வெளியில் பேசும் அரசியலை விரும்பாதவர்கள் மறுபுறம். படத்தின் வெளியீட்டு தேதி முக்கியமான காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. பள்ளிகள் திறக்கும் நேரம், ரம்ஜான் நோன்பு நேரம், கேரளா உட்பட ஒரு சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை, கர்நாடகாவில் தடை, கடைசியாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாக்களாலும், ரஜினியை விரும்பாதவர்களாலும் ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருந்தது.
இத்தனை தடைகளையும் தாண்டி முதல் நாளில் 42 கோடி ரூபாயை வசூல் செய்த காலா, முதல் வார இறுதியில் 112 கோடிகளை வசூலித்திருந்தது. முதல் வாரத்தில் 135 கோடிகளையும், 2வது வார இறுதியில் 165 கோடிகளையும் வசூலித்திருக்கிறது. வெளிநாடுகளில் காலா படத்தின் வசூல் தமிழகத்தைப் போலவே சிறப்பாக உள்ளது. சில இடங்களில் காலா பின் தங்கியது போல் தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் காலாவின் வசூல் சிறப்பாகவே உள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டியது சென்னை சிட்டி, ஆஸ்திரேலியா, கர்நாடகா (தாமதமான ரிலீஸ்) ஆகிய இடங்களில் எதிர்பார்ப்புக்கும் அதிகமாக வசூல் இருந்ததும், ஆந்திரா, அமெரிக்கா, மலேசியா ஆகிய இடங்களில் எதிர்பார்ப்புக்கு குறைவான வசூலும், யுகே, ஃபிரான்ஸ், கேரளா ஆகிய இடங்களில் மிகவும் சுமாரான வசூலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மீடியாவிலேயே இல்லாத புதிதாக முளைத்திருக்கும் ஆன்லைன் ட்ராக்கர்ஸ் ரஜினியை குறைத்து, விஜயை உயர்த்தி பேசுவதற்காகவே பல ரஜினியின் ரெக்கார்டுகளை மறைக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.
ஆனாலும் தனுஷ் மற்றும் லைக்காவின் வியாபார உத்திகளால் படம் முதல் வாரத்திலேயே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே சேட்டிலைட், டிஜிட்டல், ஓவர்சீஸ் உரிமை என அதிலேயே பெரிய லாபத்தை பார்த்து விட்டார், தயாரிப்பாளர். வினியோக முறையில் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபகரமான படமாகவே அமைந்துள்ளது காலா. ட்ராக்கர்கள் எவ்வளவோ முயற்சித்து தோல்வி என ஒரு பொய்யை நிறுவ முயற்சித்தாலும், ரசிகர்கள் உலகம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் படத்தை ரசித்த புகைப்படங்கள் வெளியாகும்போது ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. லிங்கா படத்தில் சந்தானம் “உண்மை ட்விட்டர், ஃபேஸ்புக்னு உலகம் ஃபுல்லா ஊர்வலம் போயிருச்சி, இனிமே ஜமுக்காளத்த போட்டுலாம் அமுக்க முடியாதுனு” சொல்றது தான் ஞாபகம் வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.