Indian 2 Accident : ’2.0’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படபிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
நேற்றிரவு படப்பிடிப்பு தளத்தில் திடீரென கிரேன் விழுந்தது. அப்போது அங்கு பணியாற்றிய புரொடக்ஷன் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை இயக்க உதவியாளர் சந்திரன் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தண்டலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சமீப நாட்களில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடக்கும் 2-வது விபத்து இது. சில மாதங்களுக்கு முன்பு ‘பிகில்’ படத்தின் படபிடிப்பில் அதிக எடையுள்ள விளக்கு விழுந்து, செல்வராஜ் என்ற லைட் மேன் உயிரிழந்தார். இந்த இடம் பொழுது போக்கு பூங்காவாக இருந்த போது, பெரிய சைஸ் ராட்டினம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது . அங்கு கட்டப்பட்ட ஒரு கட்டிடம் விரிசல் விழுந்து ஒரு பக்கம் சாய்ந்தே பல ஆண்டுகள் இருந்தது.
தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தையடுத்து, ஆயிரக்கணக்கானோர் புழங்கக்கூடிய இந்த படப்பிடிப்புத்தளம் பாதுகாப்பானதா என்ற கேள்வி திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் இடையே எழுந்துள்ளது.
இருப்பினும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான் நடிகர்களுக்கும், குழுவினருக்கு பொறுப்பு. அப்படியெனில் குழுவினரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், தயாரிப்பு நிறுவனங்கள் அலட்சியமான போக்கைக் கடைப்பிடிக்கின்றனவா என்ற கேள்வியும் நம்மிடம் எழுகிறது. இனி வரும் காலங்களில் இப்படியான விபத்துகளை முற்றிலும் தடுப்பது, தயாரிப்பாளர்களின் தலையாய கடமை.