Jaanu Trailer : தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற, 96 திரைப்படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஷர்வானந்த், சமந்தா முன்னணி கதாபாத்திரங்களில் ‘ராம் - ஜானுவாக’ நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் நேற்று வெளியானது.
படத்தின் இயக்குனர் பிரேம் குமார் 96-ன் அசல் தொழில்நுட்பக் குழுவை ‘ஜானுவிலும்’ தக்க வைத்துக் கொண்டுள்ளார். த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த, பாடகி சின்மாயி, சமந்தாவுக்கும் கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, “காதலே காதலே” உள்ளிட்ட பாடல்களை அப்படியே தெலுங்கிலும் பயன்படுத்தியுள்ளார். இளம் ஜானுவின் பாத்திரத்தை தமிழைப் போல், தெலுங்கிலும் கெளரி கிஷனே கைப்பற்றியுள்ளார்.
96 திரைப்படம் நமது கற்பனையை உரக்கப் பேசியது. பள்ளி நாட்களின் மறக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் எழுப்பியது. 90-ஸ் கிட்ஸ்களின் பசுமையான பல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. கூடவே இளையராஜாவின் மெல்லிசைகளும் முக்கிய அங்கம் வகித்தது. அந்த மந்திரத்தை பிரேமால் மீண்டும் உருவாக்க முடியுமா என்பது தான் தற்போதைய கேள்வி.
சரி, அதற்கான பதிலைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பிப்ரவரி 7 ஆம் தேதி, அதாவது காதலர் தின வாரத்தின் தொடக்கத்தில் இந்த ‘ஜானு’ திரைக்கு வருகிறது.
டிரெய்லரைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், ஷர்வானந்தின் ராம் கதாபாத்திரம் வார்த்தைகளின் மூலம் தன்னை வெளிப்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது. இது விஜய் சேதுபதி நடித்த ராமின் கதாபாத்திரத்தில் இல்லாத ஒன்று. சேதுபதியின் நடிப்பை ஷர்வானந்தின் நடிப்பிலிருந்து வேறுபடுத்துவதற்காக, பிரேம் இந்த மாற்றத்தை செய்திருக்கலாம். ஆனால் 96-ல் திரிஷாவைப் போலவே சமந்தாவின் கதாபாத்திரமும் திரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழில் பலரின் நினைவுகளை தட்டி எழுப்பியது போல், தெலுங்கிலும் ஜானு திரைப்படம் செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.