இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். அவருக்கு வயது 34. இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருடைய தலைமையிலான இந்திய அணிதான் ஒரு நாள் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி டிராஃபி என பல கோப்பைகளை வென்று நம்பர் ஒன் அணியாக வலம் வந்தது. இதனாலேயே கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு கோயில் கட்டும் நிலைக்கு சென்றனர்.
இத்தகைய பெருமை மிகு தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எம்.எஸ்.தோனி: சொல்லப்படாத கதை என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டு 2016-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கினார். இந்தப் படத்தில் தோனியாக இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். 104 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாக நடித்த இந்த படம் உலக அளவில் பாக்ஸ் ஆஃபிஸில் 216 கோடி வசூலித்தது.
தொலைக்காட்சி தொடர்களில் நடிகராக அறிமுகமான சுஷாந்த் சிங் ராஜ்புத், சுத் தேசி ரொமான்ஸ், பிகே, கேதார்நாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தீடீர் தற்கொலை மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் 2 நாட்களுக்கு முன்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"