நீண்ட நாட்களாக இதன் படபிடிப்பு தொடங்காமல் இருந்தது. இதற்கிடையே தற்போது ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதோடு மாநாடு படத்தின் படபிடிப்பு அடுத்த வாரம் துவங்கும் எனவும் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி, டேனியல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அப்துல் காலிக் என்ற தனது கதாபாத்திரம் மற்றும் அந்தப் பெயர் குறித்து தனியார் இணையதளத்துக்கு பேட்டியளித்த நடிகர் சிம்பு, “முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்களைப் பற்றி சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது அது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் முஸ்லிம்கள் தான்.
பெரியார் பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது சிலருக்கு குழப்பமாக இருக்கக் கூடும். எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட மனிதனாக இருக்க வேண்டும்.
பெரியாரிடம் பிடித்த விஷயங்களை வெளியில் சொல்வேன். நான் தீவிர சிவ பக்தன். சபரி மலைக்கும் செல்வேன். மற்ற மதத்தினர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது முஸ்லிமாகவும் நடிப்பேன். அதற்கு இந்தப் படத்தின் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது யுவன் சங்கர் ராஜாவின் பெயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.
சில வருடங்களுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவியது குறிப்பிடத்தக்கது.