scorecardresearch

ஊரடங்கு ஒருபுறம், ஓடிடி மறுபுறம்: இனி சினிமா தியேட்டர்களின் எதிர்காலம்?

கோடிகளில் புரளும் சினிமா துறை, வெளி உலகத்தை பொருத்தவரை உல்லாசமான கவர்ச்சி உலகம்.

ஊரடங்கு ஒருபுறம், ஓடிடி மறுபுறம்: இனி சினிமா தியேட்டர்களின் எதிர்காலம்?

Tamil Cinema: உலகம் முழுவதும் கொரொனா வைரஸால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருவாகிய இந்த வைரஸ், படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவத்தொடங்கியது. குறிப்பாக மார்ச் மாதம், தமிழகத்திற்குள் நுழைந்தது. வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் மூலம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், பின்னர் உள்ளூர் வாசிகளுக்கும் படுவேகமாக பரவியது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் இந்த வைரஸ் பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

யாஷிகாவின் கட்டாய படம்: புது ரூட்டில் ஆத்மிகா – புகைப்படத் தொகுப்பு

கொரோனா வைரஸ் தொடங்கியதுமே, சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் சினிமா துறையில் இருக்கும் தினக் கூலிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சில மூத்த நடிகர்கள் உதவினாலும், அவர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு, அனுமதியளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் காரணிகளாக சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தியேட்டர்களின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அப்படியே திறக்கப்பட்டாலும் முன்பு போல இருக்குமா என்ற இன்னொரு கேள்வி மறுபுறம் எழுந்திருக்கிறது. கோடிகளில் புரளும் சினிமா துறை, வெளி உலகத்தை பொருத்தவரை உல்லாசமான கவர்ச்சி உலகம். ஆனால் நிஜத்தில் மற்ற துறைகளை போலவே அன்றாடம் அல்லல்படும் தொழிலாளர்களும் தினக்கூலிக்கு உழைக்கும் துணை நடிகர்கள், நலிந்த கலைஞர்கள் என தத்தளிக்கும் நிலையிலேயே இருக்கிறது. கொரோனா ஊரடங்கு மற்ற துறைகளை ஆட்டம் காண செய்தது போல், சினிமா துறையை திக்குமுக்காட வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். பிற துறை நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி அளித்துவிட்டது.

ஆனால் சினிமா துறையின் நாடியாக கருதப்படும் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தியேட்டர்கள் இல்லாமல் இந்த துறையே இல்லை என்பதால் திரையுலகை சேர்ந்த மொத்த கலைஞர்களும் சோர்ந்துபோயுள்ளனர். கடந்த மார்ச் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து மார்ச் 19ம் தேதி முதல் படப்பிடிப்புகள், சினிமா தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. 3 மாதங்கள் கடந்த நிலையில் சினிமா தொடர்பான எடிட்டிங், டப்பிங், இசை சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும் சில தினங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி தரவில்லை.

ஒவ்வொரு மணிநேரத்துக்கும் வட்டிக் கணக்குப் பார்த்து பல கோடிகளை புரட்டும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்ன என்பது யோசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. படங்களை எடுத்து திரையரங்கங்கில் வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு OTT தளத்திற்கு திசை திரும்பியுள்ளனர் தயாரிப்பாளர்கள். இந்தியச் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய தளங்களில் சில தமிழ்ப் படங்கள் நேரடியாக வெளியாகி இருந்தாலும் அவையனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள். இந்த ஓடிடி தளம் முன்னணி ஹீரோக்களின் இமேஜை டேமேஜ் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமா தியேட்டர்களில், முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம், தீபாராதனை என்றிருந்த வழக்கம், அடியோடு அழிந்துவிடும். முதல் நாள் முதல் காட்சி க்ரேஸ் மெல்ல மெல்ல மறைந்து, வீட்டிலிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகும்.

படப்பிடிப்பின் போது, கேமராவுக்கு பின்னால் இருப்பவர்கள் மாஸ்க் அணியலாம், சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். ஆனால் கேமரா முன்னால் நடிப்பவர்களால் அதை செய்ய முடியாது. ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு ஓரிடத்தில் குறைந்தது 100 பேர் கூடுவார்கள். யாருக்காவது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட, உடனே படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு படப்பிடிப்பில் நடக்கும் இதுபோன்ற சம்பவத்தால் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்படும்.

காதல், திருமணம், கர்ப்பம்…: உருக வைக்கும் சிரஞ்சீவி – மேக்னா ராஜ் வாழ்க்கை

விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரறைப் போற்று’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ஜெயம் ரவியின் ‘பூமி’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட 50 படங்கள் ஏப்ரல் – மே ஆகிய கோடைவிடுமுறை காலங்களில் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனைத்தையும் கொரோனா சிதைத்துவிட்டது. ‘தியேட்டர்களைத் திறக்கலாம்’ என்று அரசு அறிவித்தாலும் இப்போதைய சூழலில், தீவிர சினிமா ரசிகர்கள் மட்டும்தான் தியேட்டருக்கு வருவார்கள். ஃபேமிலி ஆடியன்ஸ் வருவது சந்தேகம் தான். கிருமிநாசினி தெளிக்கிறோம், இடைவெளிவிட்டு அமரவைக்கிறோம் என என்ன தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் அது சரிப்பட்டு வருமா எனத் தெரியவில்லை. கொரோனாவுக்கான மருந்தோ, தடுப்பூசியோ வந்தால் தான் மக்கள் மனதில் உள்ள பயம் போகும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema theaters future coronavirus covid

Best of Express