Serial Artist Srithika: சீரியல் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ நன்றாக பாடுவார். இவரின் குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும். சன் டிவியின் 'நாதஸ்வரம்' சீரியலில் மக்கள் மனதில் மலர் கதாபாத்திரத்தின் மூலம் நின்றவர். மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஸ்ரித்திகா ஸ்ரீ, சென்னைக்கு வந்தது பாடல் பாடும் வாய்ப்பு மற்றும் நடிக்கவும் வாய்ப்பு வந்தால் நடிக்கலாம் என்கிற எண்ணத்தில் தான். இவருக்கு முதலில் 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்று நடித்தார். அதன் மூலம் தான் சன் டிவியின் நாதஸ்வரம் சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு வந்து, சின்னத்திரைக்கு நடிக்க வந்தார்.
அதன் பிறகு சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரித்திகா ஸ்ரீ, சன் டிவியின் 'கல்யாண வீடு' சீரியலில் நடித்து கொண்டு இருந்தபோது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் சிங்கப்பூர் மாப்பிள்ளையை திருமணமும் செய்துக்கொண்டார். இவர் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்கள் இவரின் அக்கா சுதாவும், அவரது கணவரும் தான். திருமணத்துக்குப் பின்னரும் 'கல்யாண பரிசு' சீரியலில் நடிப்பைத் தொடந்துக் கொண்டு இருந்தார். கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணத்தினால், கல்யாண வீடு சீரியலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சீரியல் சன் டிவியில் தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
ஸ்ரித்திகா ஸ்ரீ டப்பிங் குரல் கொடுப்பதிலும் வல்லவர். இவர் முதன் முதலில் ’யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யாவுக்கு குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அறிமுகம் ஆனார். சரண்யாவுக்கு குரல் கொடுக்க யுனிக் வாய்ஸ் ஒன்றை தேடிக்கொண்டு இருந்த போது, தோழி ஒருவர் ஸ்ரித்திகா ஸ்ரீயின் குரலை பரிந்துரை செய்ய, அதன் மூலம் தேர்வானவர் தான் ஸ்ரித்திகா. நிறைய நடிகைகளுக்கு வித்தியாசமாக டப்பிங் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நடிப்பதோடு டப்பிங்கும் தனக்கு ரொம்ப பிடித்தது என்று கூறும் ஸ்ரித்திகாவின் குரல் தனுஷுக்கு ரொம்ப பிடித்து இருந்ததாக சொன்னாராம். "ஐயோ பெருமாளே... நேக்கு வெட்க வெட்கமா வருதே..." இப்போது நினைவுக்கு வருகிறதா ஸ்ரித்திகாவின் குரல்?