Tamil Serial News: லாக் டவுன் காலத்தில் பூவே உனக்காக என்னும் புதிய தொடரை ஒளிபரப்ப தொடங்கியது சன் டிவி. இந்த சீரியலில், ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’ராமன் அப்துல்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்த விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கதிர் என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் அருணும், பூவரசியாக ராதிகா ப்ரீத்தியும் அவரது தோழி கீர்த்தியாக ஜோவிதாவும் நடித்து வருகிறார்கள். ரத்தின வள்ளி என்ற வில்லியாக தெலுங்கு நடிகை ஆமணி நடித்து வருகிறார். இவர்களுடன் தேவி பிரியா, ஸ்ரீதேவி அசோக், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
பூவரசியும் கீர்த்தியும் மிக நெருங்கிய தோழிகள். இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு அவ்வளவு பாசம். அவ்வப்போது ஒரு இளைஞன் பூவரசி கனவில் வந்து போகிறான். அவன் மீது அவளுக்கு இனம் புரியாத பற்று. விதியின் விளையாட்டால் கனவில் வந்த இளைஞன், கீர்த்தியை காதலிக்கும் கதிர். பூவரசியின் அம்மா கதிரை கட்டாயப்படுத்தி திருமணம் வரை கொண்டு செல்கிறார். கீர்த்தியும் தன் உயிர் தோழி பூவரசிக்காக கதிரை விட்டுக் கொடுக்கிறாள்.
இப்போது பூவரசி கதிரின் திருமணம் மணமேடை வரை வந்திருக்கிறது. எப்படியும் கீர்த்தி கழுத்தில் தாலி கட்டி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறான் கதிர். ஆனால் அவனது பிளானை தெரிந்துக் கொண்ட பூவரசியின் அம்மா வேறொரு பிளான் போடுகிறார். சில நிமிடங்களில் கீர்த்தி காணாமல் போக, தவித்துப் போகிறான் கதிர். அவனது நண்பனை அழைத்து, ’கீர்த்தி எங்கன்னு பாருடா’ என்கிறான்.
இதைப் பார்த்த பூவரசியின் அம்மா, ‘மாப்ள உங்க அப்பா லேண்ட்லைனுக்கு ஃபோன் பண்ணிருக்காரு’ என தனியாக அழைக்கிறார். அப்போது கீர்த்தி காரில் போய்க் கொண்டிருப்பதை வீடியோ காலில் காட்டி விட்டு, ‘அவ உயிரோட இருக்கணும்ன்னா, நீ என் பொண்ணு கழுத்துல தாலி கட்டணும்’ என மிரட்டுகிறார். இதற்கிடையே தனது தோழி கீர்த்தி, எங்கே எனத் தேடும் பூவரசி தனது அம்மாவை கேள்விகளால் வறுத்தெடுக்கிறாள்.
’அவங்க அப்பாவுக்கு திடீர்ன்னு ஹார்ட் அட்டாக், அதனால் உடனடியா கிளம்பி போய்ட்டா’ என்ற அம்மாவின் பதிலை பூவரசியால் நம்ப முடியவில்லை. இதனால், கீர்த்திக்கு ஃபோன் செய்துக் கொடுக்க, ‘தன் அம்மா சொன்ன அதே விஷயத்தை கீர்த்தியும் சொல்கிறாள். இப்போது இதை பூவரசியால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ‘சரி அப்பாவ நல்லா பாத்துக்கோ’ என கீர்த்திக்கு ஆறுதல் சொல்கிறாள் பூவரசி.
முகூர்த்த நேரம் நெருங்குகிறது, ஆனால் தாத்தா இன்னும் வரவில்லை. அவர் கோயிலுக்கு போயிருக்காரு, நீ இப்போ கல்யாணத்த பண்ணிக்கோ என அம்மா சமாதானம் சொல்லியும் அதை ஏற்க மறுக்கிறாள் பூவரசி. தாத்தா வந்தா தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அது சாயங்காலம் ஆனாலும் பரவால, என விடாப்பிடியாக இருக்கிறாள் பூவரசி.
பூவரசிக்கும் கதிருக்கும் திருமணம் நடக்குமா? அல்லது காதலி கீர்த்தியை கரம் பிடிப்பானா கதிர்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”