ஒரு தார்மீக அறம் வேண்டாமா? சினிமா டைட்டில்களை திருடும் சீரியல்கள்...
ஈரமான ரோஜாவே பற்றி கூகுள் செய்யும் போது, எனக்கு அந்தப் பற்றிய தகவல் எதுவும் கிடைப்பதில்லை. மாறாக, விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அதே பெயர் கொண்ட ஒரு சீரியலின் படங்கள் தான் கிடைக்கின்றன.
ஈரமான ரோஜாவே பற்றி கூகுள் செய்யும் போது, எனக்கு அந்தப் பற்றிய தகவல் எதுவும் கிடைப்பதில்லை. மாறாக, விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அதே பெயர் கொண்ட ஒரு சீரியலின் படங்கள் தான் கிடைக்கின்றன.
பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் (டி.எஃப்.பி.சி) முன்னாள் தலைவரான கேயார், நீதிமன்றத்துக்கு செல்லும் நோக்கில் இருக்கிறார். காரணம், ’ஈரமான ரோஜாவே’ உட்பட அவரது இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் தலைப்புகள் அவரது அனுமதியின்றி டிவி சீரியல்களுக்கு வைக்கப்பட்டுள்ளன. இதே பிரச்சினையில் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் இருக்கிறார். அவரது ‘நீதானே என் பொன்வசந்தம்’ டைட்டிலில் ஜீ தமிழ் சேனலில் விரைவில் புதிய சீரியலொன்று ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த சீரியலின் மூலம் டிவி-க்கு அறிமுகமாகிறார் நடிகர் ஜெய் ஆகாஷ்.
”திரைப்படத்தின் முக்கியக் கருப்பொருளைப் பிரதிபலிப்பதால் தலைப்புகள் ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானவை” என்கிறார் கேயார். "ஒரு குழுவாக நாங்கள் எங்கள் படங்களுக்கான தலைப்புகளைக் கொண்டு வர அதிக நேரம் செலவழிக்கிறோம். அதை TFPC -ல் பதிவு செய்வதற்கான ஒரு நடைமுறையும் உள்ளது. ஒருவேளை மற்றொரு தயாரிப்பு நிறுவனம் அந்த தலைப்பை ஏற்கனவே பதிந்திருந்தால், மீண்டும் தலைப்புக்கான தேடல் தொடங்குகிறது. சில நேரங்களில் ஏற்கனவே தலைப்பை பதிவு செய்தவருடன் பேச்சுவார்த்தையும் நடத்துவோம். தலைப்புக்காகவே மக்கள் முதல் நாள் திரையரங்குக்கு படையெடுத்த காலமும் இருக்கிறது. இந்த நிலையில், தொலைக்காட்சி சீரியல்களைத் தயாரிப்பவர்கள் உரியவர்களிடம் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அடிப்படை மரியாதை கூட இல்லாமல், எங்கள் படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்தும்போது எங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.
1991-ல் வெளியான ‘’ஈரமானே ரோஜாவே’ படத்தில் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார் கேயார். இந்தப் படம் 125 நாட்கள் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தொடர்ந்த கேயார், “இப்போது, நான் ஈரமான ரோஜாவே பற்றி கூகுள் செய்யும் போது, எனக்கு அந்தப் பற்றிய தகவல் எதுவும் கிடைப்பதில்லை. மாறாக, விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அதே பெயர் கொண்ட ஒரு சீரியலின் படங்கள் தான் கிடைக்கின்றன. இது உண்மையில் வலிக்கிறது. எனது மற்ற திரைப்படங்களான, ’பூவே பூ சூட வா’, மற்றும் ’இரட்டை ரோஜா’ ஆகியவையும் சீரியல்களின் பெயர்களாக பயன்படுத்தப்படுகின்றன. தங்கள் சீரியலுக்கு தலைப்புகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ‘தேங்க்ஸ் கார்ட்’ ஒன்றை போடும்படி FEFSI-க்கு தெரிவிக்குமாறு TFPC மற்றும் இயக்குநர்கள் சங்கத்தை கேட்டுக் கொண்டேன்” என்றார்.
Advertisment
Advertisements
இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, திரைப்படங்களைப் போல டிவி சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும் என்பதை தீவிரமாக ஆதரிக்கிறார் கேயார். "சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து முறையான பதில் கிடைக்காவிட்டால், நீதிமன்றத்திற்குச் செல்வது பற்றியும் நான் சிந்திக்கிறேன்" என்கிறார்.
இதற்கிடையே, சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா மற்றும் சரண்யா ஆகியோரை வைத்து ஒரு படத்தைத் தயாரித்தார். அதற்கு ’மகளீர் மட்டும்’ என்பது தான் மிகவும் பொருத்தமான தலைப்பு என்று உணர்ந்தார் இயக்குனர் பிரம்மா. 1994-ம் ஆண்டில் இதே தலைப்பில் பெண்கள் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனை அணுகி, அந்த தலைப்பைப் பயன்படுத்துவதற்கான உரிய அனுமதியைப் பெற்றார்.
இந்த நிலையில், 2.30 மணி நேர சினிமாவுக்கே ஒவ்வொரு விஷயத்திற்கும் அத்தனை மெனக்கெடுதலுடன் பணியாற்றுகிறார்கள் டைரக்ஷன் டீம். ஆனால் சீரியல்களைப் பொறுத்தவரை தினமும் 22 - 25 நிமிடங்கள் (விளம்பரத்தை தவிர்த்து) ஒளிபரப்பாகிறது. பல நூறு எபிசோட்கள் வரையில் இயக்கப்படும். கதையின் போக்கு, திருப்புமுனை, ட்விஸ்ட் என்பதையெல்லாம் முன்பே அறிந்திருப்பார்கள் இயக்குநர் குழுவில் இருப்பவர்கள். அப்படியெனில் இப்படியான நீண்ட கதையை யோசித்து, அதற்கான திரைக்கதையையும் அமைப்பவர்களுக்கு, தங்கள் கதைக்கு ஏற்றபடி ஒரு டைட்டிலை தேர்வு செய்ய முடியவில்லையா என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது. ஒருவேளை ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்பு தான் கச்சிதமாக இருக்கும் எனக் கருதினால், அதற்குரிய தயாரிப்பாளரிடம் முறையான அனுமதி பெறலாமே.