Vaanam Kottatum : இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இதனை மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் சரத் குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சரத்குமார், ”சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் தனா இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை என்னிடமும், ராதிகாவிடமும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி தோல்வி ஆகியவைகள் தான் படத்தின் கதை.
Advertisment
Advertisements
இதில் நடித்தது எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. வானம் கொட்டட்டும் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதையும் மீறிப் பணியாற்றினார்” என்றார்.
சரத்குமாரை தொடர்ந்துப் பேசிய ராதிகா, “எங்களைப் பொறுத்தவரை நாங்கள் செய்யும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
நாங்கள் இருவருமே செய்கின்ற வேலையை விருப்பத்துடன் செய்கிறோம். ஆகையால் தான் பல்துறை திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. இருவரும் சேர்ந்து நடிக்க, பலரும் கதை கூறி இருக்கிறார்கள் ஆனால் எங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லை. தனா கூறிய கதையைக் கேட்டதும் எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. படப்பிடிப்பு நடத்திய விதமும், கதாபாத்திரங்கள் அமைந்த விதமும் மிக அழகாக இருக்கிறது. இப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்போதுமே போட்டி கிடையாது.
பொதுவாக நான் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்ற மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்ற மாட்டேன். இது வரை இப்படித்தான் இருந்து வந்தது. ஆனால், இந்த படத்தில் இது விதிவிலக்காக மாறிவிட்டது. இயக்குநர் தனாவைப் பொறுத்தவரை கதை எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். தேவையில்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடிக்க மாட்டார்” என தனது அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.