தேர்தல் ஆணையம் சமீபத்தில் பூத் ஏஜெண்டுகளை நியமித்தல் தொடர்பாக கொண்டு வந்த புதிய விதிமுறையால் மேற்கு வங்கத்தில் தற்போது சர்ச்சை நிலவி வருகிறது. புதிய விதிகளின் படி, அரசியல் கட்சிகள் தற்போது ஒரு தொகுதியில் இருக்கும் எந்த நபரை வேண்டுமானாலும், அந்த தொகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜென்ட்டாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளது. இதற்கு முன்பு ஒரு பூத் ஏஜென்ட் அந்த வாக்குச்சாவடி அல்லது அதற்கு அருகில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் இந்த விதியை கடுமையாக எதிர்த்துள்ளது. ஒருபக்க சார்பாக இது செயல்படுகிறது என்று அது குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இந்த விதியை நீக்குமாறு கடிதம் எழுப்பியுள்ள நிலையில், பாஜக இந்த விதியை சுதந்திர மற்றும் நியாயமான தேர்தலுக்கு வழி வகுக்கும் என்று கூறியுள்ளது.
பூத் ஏஜென்ட் என்பவர் யார்?
போலிங் ஏஜென்ட் அல்லது பூத் ஏஜென்ட் என்பவர் கட்சியால் நியமிக்கப்படும் நபர். வேட்பாளரால் அந்த தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்க முடியாது. எனவே தான் தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு பூத் ஏஜென்ட்களை நியமிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. அவர் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகளை கண்காணிப்பார்.
பூத் ஏஜென்ட்டின் பணி என்ன?
தேர்தல் ஆணையத்தின் விதிகள் படி, பூத் ஏஜென்ட் என்பவர் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும், இ.வி.எம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை இயக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். இதனை அறிந்து கொள்ள ரிட்டர்னிங் ஆஃபிசர் நடத்தும் செயல்முறை விளக்க கூட்டங்களில் அவர் பங்கேற்றிருக்க வேண்டும்.
இதற்கு முன்பு இவர்கள் எப்படி நியமனம் செய்யப்பட்டனர்?
முன்பு, பூத் ஏஜென்ட்கள் அந்த வாக்குச்சாவடி வாக்காளர்களாகவோ அல்லது அருகில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடி வாக்காளர்களாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் இந்த இரண்டு வாக்குச் சாவடிகளில் ஏதேனும் ஒன்றில் பணியில் அமர்த்தப்படுவார்.
புதிய விதி கூறுவது என்ன?
இந்திய தேர்தல் ஆணையம் மேலே கூறியிருக்கும் விதியை மாற்றி, கட்சி ஒரு தொகுதியில் இருக்கும் எந்தவொரு நபரையும் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் பூத் ஏஜென்ட்டாக பணியில் அமர்த்தலாம் என்று கூறியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?
திரிணாமுல் காங்கிரஸ் இந்த புதிய விதிமுறை பாஜகவிற்கு சாதகமாக அமையும் என்று கூறியுள்ளது. இது நிச்சயமாக பாஜகவிற்கு உதவவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் அக்கட்சி மேற்கு வங்கத்தில் மிகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏஜென்ட்டுகளை நியமிக்கும் வகையில் பலம் மிக்க கட்சியாக இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த விதிமுறை தவறான நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.
மேலும் படிக்க : இது காங்கிரஸ் – பாஜகவிற்கு இடையே நடக்கும் “டீல்”; விமர்சித்த பினராயி விஜயன்
கொரோனா காலத்தில் ஒருவரை வாக்குச்சாவடியில் வெகுநேரம் அமரவைப்பதில் சிக்கல் இருப்பதாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏஜென்ட்டுகளை நியமிக்க இந்த விதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த விதிமுறை மாற்றம் 7-10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil